திங்கட்கிழமை, மே 27, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் மூடு விழா காணும் தமிழ் பாலர் பள்ளிகள்! பெற்றோர்கள் அதிர்ச்சி
அரசியல்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் மூடு விழா காணும் தமிழ் பாலர் பள்ளிகள்! பெற்றோர்கள் அதிர்ச்சி

கோலாலம்பூர், நவ. 16-

தேசிய முன்னணி ஆட்சியின்போது கல்வி அமைச்சு மற்றும் ம.இ.கா தலைவர்களின் முயற்சியில் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்காக கல்வி அமைச்சின் வாயிலாகத் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியமும் வழங்கப்பட்டது.

கடந்த 2017-ஆம் ஆண்டு 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு ஒரு பாலர் பள்ளி அமைக்க கல்வி அமைச்சு 2 லட்சம் வெள்ளி மானியம் வழங்கியுள்ள நிலையில், இந்தியர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளில் உள்ள சில தமிழ்ப்பள்ளிகளில் இரண்டு பாலர் பள்ளிகள் அமைக்கப்பட்டு 4 லட்சம் வெள்ளி மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலையில் இந்தப் பாலர் பள்ளிகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு, தயார்நிலையில் உள்ள பட்சத்தில், 2019-ஆம் ஆண்டு முதல் துவக்கம் கண்டு, மாணவர்கள் பாலர் பள்ளிகளில் படிக்கலாம் என்றுதான் முந்தைய அரசும், கல்வி அமைச்சும் பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களிடையே தெரிவித்து வந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்தப் பாலர் பள்ளி விவகாரம் தொடர்பில் அரசும், கல்வி அமைச்சும் எந்தவொரு முடிவையும், நிலைப்பாட்டையும் இதுவரை தெரிவிக்காமல் இருப்பது பெற்றோர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

இப்படியொரு பிரச்னை இருப்பது புதிய அரசுக்குத் தெரியுமா? இல்லையா? என்ற கேள்வியோடு அவர்கள் பார்வைக்கு இந்தப் பிரச்னையைக் கொண்டு வர தற்போது நெகிரி செம்பிலான் ஸ்பிரிங் ஃபீல்ட் தமிழ்ப்பள்ளி வட்டாரத்தில் உள்ள பெற்றோர்களும், சிலாங்கூர் சபா பெர்னாம் தோட்ட தமிழ்ப்பள்ளிவட்டாரத்தில் உள்ள பெற்றோர்களும் முன்வந்துள்ளனர். இன்னும் எத்தனை தமிழ்ப்பள்ளிகள் இந்தப் பிரச்னையை எதிர்நோக்கி வருகின்றன என்பது துல்லியமாகத் தெரியவில்லை.

ஸ்பிரிங் ஃபீல்ட் தமிழ்ப்பள்ளியில் இரண்டு பாலர் பள்ளிகள் அமைக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன. ஆனால், இணையத்தளத்தின் வாயிலாகப் பிள்ளைகளை இந்த பாலர்பள்ளிகளுக்குப் பதிவு செய்ய இயலவில்லை. காரணம் இணையப் பதிவில் அத்தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளியினுடைய தகவல்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை. இருந்தபோதும் இதுவரை பள்ளி நிர்வாகத்திடம் சுமார் 40 மாணவர்கள் அடுத்தாண்டு சேர்க்கைக்குப் பதிவு செய்துள்ளதாக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சரவணன், வாரியப் பொருளாளர் லிங்கேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், இதுநாள் வரை பள்ளி நிர்வாகம் கல்வி அமைச்சின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் தகவல் மட்டும்தான் பெற்றோர்களுக்குக் கிடைத்துள்ள பதில். அதோடு பாலர்பள்ளிக்கு ஆசிரியர்களும் இன்னும் கல்வி அமைச்சால் வழங்கப்படாத நிலையில், 2019-ல் இப்பாலர்பள்ளி செயல்படுமா இல்லையா ?என்ற அச்சத்தில் பெற்றோர்கள் இருக்கின்றனர் என்று தெரிவித்தனர்.

இதே பிரச்னையைத்தான் சபா, பெர்னாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி வட்டாரத்தில் உள்ள பெற்றோர்களும் எதிர்நோக்குகின்றனர்.

எங்களுக்கும் பள்ளி நிர்வாகத்தால் கிடைத்த பதில், கல்வி அமைச்சு இன்னும் இந்தப் பாலர் பள்ளிக்கு ஒப்புதல் மற்றும் ஆசிரியர்களை இன்னும் வழங்கவில்லை என மாணவர்களின் பெற்றோர்களான யோகேஸ்வரன், கிருஷ்ணன், மகேஸ்வரி, குணவதி, கலாதேவி ஆகியோர் தெரிவித்தனர்.

ஏன் ஆசிரியர்கள் வழங்கப்படவில்லை? ஏன் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை? 2019-ல் பாலர் பள்ளி நடத்தப்படுமா இல்லையா? என்கிற எங்களின் கேள்விகளுக்குக் கல்வி அமைச்சு விரைந்து விளக்கத்தைத் தர வேண்டும் என அவர்கள் மேலும் கேட்டுக்கொண்டனர்.

கல்வி அமைச்சின் பதிலைப் பொறுத்தே எங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும். இப்படி எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் நாள்களைக் கடத்தினால், பிறகு எங்கள் பிள்ளைகளை பிற பாலர் பள்ளிகளில் சேர்ப்பதற்குச் சிரமம் ஏற்படும்.

தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளி அமைக்கப்பட்டதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். எங்கள் பிள்ளைகளின் தொடக்கக் கல்வி தாய்மொழிக் கல்வியிலிருந்து தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இன்றுவரை ஆவலோடு காத்திருக்கிறோம். விரைந்து அமைச்சு எங்களுக்குப் பதில் கொடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

தேசிய முன்னணி அரசின் முயற்சியில், ம.இ.கா தலைவர்களின் ஈடுபாட்டில் உதயமான இந்தப் பாலர் பள்ளி திட்டம், இப்போது என்ன காரணத்தினால் தொடராமல் இருக்கிறது என்று தெரியவில்லை.
இந்தப் பாலர் பள்ளிக்கு முறையாக ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தவும், அடுத்த ஆண்டு செயல்படுவதற்கு ஏதுவாக ம.இ.கா தலைவர்கள் அரசாங்கத்திடம் பரிந்துரைக் கும்படியும் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன