சென்னை, நவ.17- 

‘கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல், நேற்று நள்ளிரவு அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. தற்போது, கஜா புயல் தமிழகத்தைக் கடந்து கேரளா நோக்கி நகர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தும், இன்னும் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.

முன்னதாக, கஜா புயல் 15-ம் தேதி தமிழகத்தைத் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவித்துவந்தது. இதையடுத்து, பாதிப்புக்குள்ளாகும் எனக் கணிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு மின்சாரம் துண்டிப்பு, தாழ்வான பகுதி மக்களை வெளியேற்றுவது, தயார் நிலையில் மீட்புப் படைகள் போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. இதனால் புயல் கடுமையாகத் தாக்கியிருந்தும் பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் பெரிதான பாதிப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்று காலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் பாராட்டியிருந்தார். இவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் தமிழக அரசைப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள அவர், “இதற்கு முன் நாம் கடந்துவந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ‘அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனவும் கூறியுள்ளார்.