சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளை தொடங்க அரசு முனைப்புக் காட்ட வேண்டும்! -டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்
அரசியல்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளை தொடங்க அரசு முனைப்புக் காட்ட வேண்டும்! -டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்

செமினி. நவ. 18
மலேசியாவில் உள்ள 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் வகுப்புகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை கடந்த அரசு செய்திருந்தது. 2019ஆம் ஆண்டிற்கான பதிவுகளும் வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட அந்த 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இன்னமும் தொடங்கப்படாமல் இருக்கின்றது. இதற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வலியுறுத்தினார்.

கடந்த தேசிய முன்னணி அரசாங்கம் 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளை அமைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. தமிழ்ப்பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டன. இப்போது அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்கும் போது, தமிழ் பாலர் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது சமுதாயத்திற்கு ஏமாற்றத்தை தந்துள்ளதாக பெற்றோர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இதுகுறித்து கருத்துரைக்கையில் டத்தோஸ்ரீ நஜீப் மேற்கண்டவாறு கூறினார். தாம் தேசிய முன்னணி தலைவராகப் பொறுப்பேற்றது முதல், இந்திய சமுதாயத்தின் பிரச்னைகளை களைவதற்கு தம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாக நஜீப் குறிப்பிட்டார். இந்திய சமுதாயத்தின் பிரச்னைகளை அறிந்து கொள்ள பிரதமர் துறையின் கீழ், இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப் பிரிவை தொடங்கியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தியர்களின் குடியுரிமை பிரச்னையை கலைவதற்கு மை டாஃப்தார் திட்டத்தை தொடங்கியதோடு, அரசு துறைகளில் இந்தியர்களுக்கான பதவி உயர்வையும் உறுதி செய்தேன். உயர்கல்விக்கூடங்களில் இந்திய சமுதாயம் பின்தங்கிவிடக்கூடாது என்பதற்காக மெட்ரிக்குலேஷன் கல்லூரியில் 1,500 சிறப்பு இட ஒதுக்கீட்டையும் வழங்கினேன் என நஜீப் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளிகள் மேம்பாடு, தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடு என இந்திய சமுதாயத்திற்கான தேவைகளை தொடர்ந்து வழங்கி வந்தேன். தேசிய முன்னணி அரசு தவறே செய்யவில்லை என நான் கூறவில்லை. எங்களின் ஆட்சிகளில் தவறு நடந்தது. ஆனால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தவறு செய்யவில்லை என நஜீப் கூறினார்.

தேசிய முன்னணியின் ஆட்சிக்காலத்தில் பலர் நம்மோடு இருந்தார்கள். இப்போது பலர் இல்லாமல் போய்விட்டார்கள். ஆனால் ஐபிஎப் கட்சி தொடர்ந்து தேசிய முன்னணிக்கு ஆதரவாக இருந்து வருகின்றது. இந்த ஆதரவு தொடர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன