சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஐபிஎப் கட்சிக்கு அங்கீகாரம் கொடுத்தவர் டத்தோஸ்ரீ நஜீப்! -செனட்டர் டத்தோ சம்பந்தன் புகழாரம்
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஐபிஎப் கட்சிக்கு அங்கீகாரம் கொடுத்தவர் டத்தோஸ்ரீ நஜீப்! -செனட்டர் டத்தோ சம்பந்தன் புகழாரம்

செமினி, நவ. 18
ஐபிஎப் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கியவர் டத்தோஸ்ரீ நஜீப்தான். அதனால் அவரின் சேவைக்கு என்றுமே மதிப்பளிப்போம் என ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் கூறினார். ஐபிஎப் கட்சியின் தீபாவளி தேசிய பொது உபசரிப்பு செமினியில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தேசிய முன்னணியின் தலைவராகவும் பிரதமராகவும் பொறுப்பேற்ற பிறகுதான் ஐபிஎப் கட்சிக்கு கூட்டணியில் அங்கீகாரம் கிடைத்தது. தேசிய முன்னணியின் தோழமை கட்சியாக இருந்த ஐபிஎப் கட்சியை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் டத்தோ நஜீப் அனைத்து நிலைகளிலும் உதவி புரிந்தார்.

கட்சியின் நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு அவர் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ஐபிஎப் கட்சியை தோற்றுவித்த டான்ஸ்ரீ பண்டிதனுக்கு செனட்டர் பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு எந்த உயர்மட்ட பதவியும் ஐபிஎப் கட்சிக்கு கிடைக்கவில்லை. இதனிடையே கடந்த ஆண்டு ஐபிஎப் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் டத்தோஸ்ரீ நஜீப், கட்சிக்கு செனட்டர் பதவியை வழங்கினார் என டத்தோ சம்பந்தன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் தோல்வி கண்டதால், தேசிய முன்னணியிலிருந்து பலர் விலகி விட்டார்கள். ஆனால் ஐபிஎப் அப்படி அல்ல. எங்களின் கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் உறுதுணையாக இருந்த டத்தோஸ்ரீ நஜீப்பிற்கும் தேசிய முன்னணிக்கும் என்றுமே விசுவாசமாக இருப்போம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வசதி குறைந்த 300 பேருக்கு தீபாவளி பணமுடிப்பு வழங்கப்பட்டது. அதோடு டுனடின் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 5000 வெள்ளி, காஜாங் உத்தாமா முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு 5000 வெள்ளி செமினி தமிழ்ப்பள்ளிக்கு 5000 வெள்ளி, செமினி இளைஞர் கால்பந்து கிளப்பிற்கு 3000 வெள்ளிக்கான மாதிரி காசோலையும் வழங்கப் பட்டது.

ஐபிஎப் கட்சி ஏற்பாடு செய்திருந்த இந்த தீபாவளி பொது உபசரிப்பில் டத்தின் ஜெயலெட்சுமி சம்பந்தன், ஐபிஎப் கட்சியின் துணைத்தலைவர் லோகநாதன், கட்சியின் தலைமைச் செயலாளர் காடீர் மைதின், இளைஞர் பிரிவுத் தலைவர் ஜோய், தொழிலதிபர் டத்தோ கார்த்திக், டயானா கெட்ரஸ் உரிமையாளர் பிஎம் சாமி, ஐபிஎப் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள் உறுப்பினர்கள் என 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். கலை நிகழ்ச்சியுடன் இந்த தீபாவளி உபசரிப்பு மிகச் சிறப்பாக நடந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன