4 மணி நேரத்துக்குப் பின்னர் எஸ்.பி.ஆர். எம்-ம்மில் இருந்து வெளியேறினார் நஜிப் !

0
3

புத்ராஜெயா, நவ.19- 

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் ( எஸ்.பி.ஆர்.எம் ) நான்கு மணி நேரம் வாக்குமூலம் அளித்தப் பின்னர் அங்கிருந்து வெளியேறினார். காலை 9.23 மணி அளவில் எஸ்.பி.ஆர். எம் தலைமையகம் வந்தடைந்த  நஜிப்பின் பெர்டானா ரக கார் , பிற்பகல் 1.15 மணி அளவில் அங்கிருந்து வெளியேறியது.

சரவாக்கில் உள்ள பள்ளிகளில் சூரிய சக்தி திட்டம் அமல்படுத்துவதில் நடந்த ஊழல் தொடர்பில் நஜிப்பிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நஜிப்பின் துணைவியார், டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர், இதே திட்டம் தொடர்பில் 18 கோடியே 75 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கடந்த வாரம் வியாழக்கிழமை கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

ரோஸ்மாவின் சிறப்பு அதிகாரி டத்தோ ரீசால் மன்சோரும் , சரவா பள்ளிகளில் சூரிய சக்தி திட்டம் தொடர்பில்  ஐந்து லட்சம் ரிங்கிட் பெற்றதுடன் ரோஸ்மா மன்சோர் சார்பில் 50 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.  அதேவேளையில் இந்த திட்டம் தொடர்பில் தமக்காக 2 கோடியே 50 லட்சம் ரிங்கிட் லஞ்சத்தைக் கோரியதுடன் , ரோஸ்மா மன்சோருக்கு 18 கோடியே 75 லட்சம் ரிங்கிட் லஞ்சத்தை கோரியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம், அதன் துணை நிறுவனம் எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் நடந்த முறைக்கேடுகள் தொடர்பில் நஜிப் பலமுறை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.