கோலாலம்பூர், நவ. 19-

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் (பட்ஜெட்) இந்தியர்களுக்கு மனநிறைவு அளிக்கவில்லை. குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு சிறப்புச் சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளதாக கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் குற்றம் சாட்டினார்.

கடந்த தேசிய முன்னணி அரசு, பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கான தேவைகளை துல்லிதமாக அறிந்து அதற்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கியது. ஆனால், அண்மையில் நிதியமைச்சர் லிம் குவான் எங் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மற்றும் சமூக பிரச்னைகளுக்கான ஒதுக்கீடு வழங்கப்படாதது இந்திய சமுதாயத்தை ஏமாற்றும் வகையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தெக்குன், அமானா சஹாம் கடனுதவித் திட்டத்தில் முன்னாள் பிரதமர் நஜீப் சிறப்பு ஒதுக்கீட்டை வழங்கினார். இதன் மூலம் இந்திய வர்த்தகர்கள் எளிதில் கடனுதவியைப் பெற முடிந்தது. அதோடு, தங்களின் தேவைகளையும் தீர்த்துக் கொள்ள அது வழிவகை செய்யும்.

டத்தோஸ்ரீ நஜீப் ஆட்சிக் காலத்திற்கு முன்பு தெக்குன், அமானா சஹாம் கடனுதவித் திட்டங்களில் இந்தியர்களுக்கான  பிரத்தியேக  ஒதுக்கீடு இருந்ததில்லை. அதனால், கடனுதவி கிடைப்பதில் இந்திய சமுதாயம் பெரும் சிக்கலை எதிர்நோக்குகின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து நாடு தழுவிய நிலையில் இந்திய வர்த்தகர்களிடையே ஆய்வு நடத்தப்பட்டு அவர்களின் உண்மை நிலையை கண்டறிந்து அதன் பின்னர் தனி ஒதுக்கீட்டை வழங்குவதுதான் சிறந்தது என கடந்த அரசு முடிவு செய்தது.

அதன் மூலம் சீட் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியர்களும் தெக்குன், அமானா சஹாம் மூலம் கடனுதவிகளை பெற்று தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொண்டார்கள். சீட் இயக்கமும் அதற்காகச் செயல்பட்டது. ஆனால், இப்போது அறிவித்திருக்கும் பட்ஜெட்டில் அதற்கான எந்த சலுகையும் முன் வைக்கப்படவில்லை. மீண்டும் பழைய நிலை தொடர்ந்தால் அது இந்திய சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என சிவராஜ் சுட்டிக் காட்டினார்.

இப்போது மற்ற இனத்தவர்களுடன் போட்டியிட்டு கடன் உதவியை பெற வேண்டும் என்ற சூழ்நிலை இந்திய சமூதாயத்திற்கு ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக 2009ஆம் ஆண்டு தொடங்கி டத்தோஸ்ரீ நஜீப் பட்ஜெட்டில் சிறப்பு மானியத்தை வழங்கினார். அதோடு, ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியிலும், பாலர் பள்ளிகளை அமைக்க வேண்டும் என முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள் அமைக்கப்பட்டது. அந்த 50 பாலர் பள்ளிகளும் செயல்படும் நிலையில் இருக்கும்போது அரசு அதற்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கவில்லை.

இப்போது அந்த 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளின் நிலை என்ன என்ற  கேள்வி சமுதாயத்தின் மத்தியில் எழும்போது இதுவரையில் எந்த பதிலும் இல்லை. இந்தியர்களின் அடிப்படை தேவைகள் என்ன 10 ஆண்டுகளில் அவர்களின் பிரச்னையை எப்படி தீர்ப்பது என்பது குறித்து கடந்த தேசிய முன்னணி அரசு இந்திய சமுதாயத்திற்கான புளு பிரின் எனப்படும் திட்ட வரைவை  உருவாக்கியது.

அதை செயல்படுத்தினாலே இந்திய சமுதாயத்தின் பிரச்னைகளை தீர்த்து விடலாம். இப்போதுள்ள நம்பிக்கைக் கூட்டணியில் இந்திய தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களாக இருந்தபோது இந்திய சமுதாயத்தின் அடிப்படை பிரச்னை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பினார்கள். இப்போது அவர்களே அமைச்சர் பதவியில் அமர்ந்திருப்பதால் இப்பிரச்னைகளை உடனடியாகத் தீர்த்து விடலாமே என்ற கேள்வியையும் சிவராஜ் முன் வைத்தார்.

தேசிய முன்னணி அரசு உருவாக்கிய பிரிம் திட்டத்தை வாழ்க்கை செலவின உதவி நிதி என பெயர் மாற்றம் செய்து வழங்க முன் வந்திருக்கிறது. ஒரே மலேசியா கிளினிக்குகளை சமூக நல கினிக்குகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல் தேசிய முன்னணி உருவாக்கிய இந்தியர்களுக்கான புளு பிரின் திட்டத்தை பெயர் மாற்றம் செய்தாவது செயல்படுத்த வேண்டும் என சிவராஜ் வலியுறுத்தினார்

இந்தியர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பிய 4 அமைச்சர்களும், இப்போது அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியை அவர் முன் வைத்தார். இந்திய தலைவர்களை விமர்சிப்பது எனது நோக்கமல்ல. இனியும் செயல்படாமல் இருப்பது தவறு என்பதை சுட்டிக் காட்டவே நான் விரும்புகிறேன். தேசிய முன்னணி செய்ததை விட இந்திய சமுதாயத்திற்கு அதிகமான சேவைகளை வழங்க நம்பிக்கைக் கூட்டணி அரசு கடமைப்பட்டுள்ளது. அதை அவர்கள் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது ம.இ.கா. உதவித் தலைவருமான சிவராஜ் சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.