அந்தோணி லோக் மீது  வழக்குத் தொடுப்பேன் -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

0
5

கோலாலம்பூர், நவ. 19

கே.எல்.ஐ.ஏ. அனைத்துலக விமான நிலையத்தில் தாம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டை முன் வைத்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மீது வழக்குத் தொடுக்கவிருப்பதாக மேலலைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் திங்கட்கிழமை தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அந்தோணி லோக் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஒரு பெண்மணி கூறியதை முன் நிறுத்தி அந்தோணி லோக் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இது குறித்து விளக்கம் அளிக்க தாம் அவரை தொடர்பு கொண்ட போது பதிலளிக்கவில்லை. என் தரப்பு நியாயத்தை கேட்காமல் ஒரு சாராரின் விளக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி தம்மை இழிவுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது மகளை வழியனுப்பி வைக்க கேஎல்ஐஏ வந்தபோது அங்குள்ள அதிகாரிகள் தம்மிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது குறித்து டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விளக்கம் அளித்தார். விஐபி வளாகத்திற்குள் நுழைந்தவுடன் சோதனைக் கருவியை தாண்டித்தான் தாம் உள் நுழைந்ததாக அவர் தெரிவித்தார்.  தாம் சோதனை கருவியை தாண்டிய போது எந்த ஒலியும் எழவில்லை. ஆனால், அங்கிருந்த பாதுகாவலர் என்னை சோதனையிட வேண்டும் என்று கூறினார். இது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியை அவர் முன் வைத்தார்.

விஐபி வசதிகளைப் பயன்படுத்த தான் அங்கு செல்லவில்லை. என் மகளை வழியனுப்பி வைக்கவே அங்கு சென்றேன். ஆனால், விதிமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என அங்குள்ளவர்கள் கூறினார்கள். அவர்களுக்கு நான் தெளிவான விளக்கம் அளித்து விட்டேன். விஐபி பாதையை மட்டுமே நான் கடந்து செல்லப்  போவதாகவும் கூறினேன். ஆனால், இந்த விவகாரம் திரித்து கூறப்பட்டுள்ளது. அங்கிருந்த பெண்மணி தாம் விதிமுறைகளை மீறி அதிகாரிகளை மிரட்டியதாகக் கூறிய விஷயத்தை மையமாகக் கொண்டு அந்தோணி லோக் செய்தியாளர் சந்திப்பை நடத்தி விட்டார்.

இதில் என் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு விளக்கம் கேட்டிருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால், என் மனைவி, மகள் ஆகியோரின் பதிவுகளைக் கொண்ட வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக தளலங்களில் பகிரப்பட்டுள்ளதால் பலர் அந்த வீடியோவின் கீழ் தகாத வார்த்தைகளால் கருத்திடுகிறார்கள்.

இது என்னை மிகப் பெரிய மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. என் குடும்பத்தை இழிவுப்படுத்தும் வகையில் அந்தோணி லோக்கின் நடவடிக்கை அமைந்துள்ளது. இதனால், இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கலாம் என முடிவு செய்து விட்டேன். மலேசிய அரசாங்கத்தில் நானும் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கின்றேன். எனக்கு மரியாதை கொடுக்க வேண்டியது மிக முக்கியம். ஆனால், நான் ஆளும்கட்சியை பிரதிநிதிக்கவில்லை என்பதால் தமக்கு எதிராக இந்த அநீதி முன்னெடுக்கப்பட்டுள்ளது என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பில் தாம் போலீசில் புகார்  செய்துள்ளதாகவும் வழக்கறிஞர்களின் ஆலோசனையின் கீழ் அந்தோணி லோக் மீது மானநஷ்ட வழக்கு தொடங்கப்படும். அதன் முழு விவரங்கள் வழக்கறிஞர்களுடன் விவாதிக்கப்பட்ட பின்னர்தான் வெளியிடப்படும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  இனியும், இதுபோன்ற சம்பவங்கள்  தொடரக்கூடாது. என் தரப்பு நியாயத்தை கேட்டிருந்தால் இப்படி ஒரு பிரச்னை எழுந்திருக்காது. அதை விடுத்து ஒரு தரப்பு நியாயத்தை முன்னிறுத்தி என்னை அவமானப்படுத்தியதற்காக அந்தோணி லோக் வழக்கை சந்திக்க  வேண்டும் என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகக் கூறினார்.