வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > லதா ரஜினிகாந்தின் சமுதாயச் சேவை! மலேசியாவை பிரதிநிதித்தார் டத்தோ அப்துல் மாலிக்
கலை உலகம்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

லதா ரஜினிகாந்தின் சமுதாயச் சேவை! மலேசியாவை பிரதிநிதித்தார் டத்தோ அப்துல் மாலிக்

சென்னை, நவ. 26-

தயா பவுண்டேஷன் சார்பில் குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ள ‘குழந்தைகளுக்கான அமைதி என்ற அமைப்பின் தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா ரஜினிகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மலேசியாவிலிருந்து மாலிக் ஸ்ட்ரிம் காப்பிரேஷன் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்த குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், நம் நாட்டுக்கு வேலைக்காரர்கள்தான் தேவை, தலைவர்கள் தேவையில்லை. ரஜினியுடன் சேர்ந்து எம்.எல்.ஏ அமைச்சராவதைவிட அவருடைய ரசிகனாக தொண்டனாக இருப்பதை பெரிதாக கருதுகிறேன்” என்றார்.

ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் பேசுகையில், மாற்றங்கள் தனி மனிதரிடமிருந்து உருவாக வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினி காந்த், மேற்கத்திய நாடுகள் குழந்தைகளுக்காக செலவிடும் பணத்தில் ஒரு விழுக்காடுகூட இந்திய அரசு செலவு செய்வதில்லை என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினி காந்த், குழந்தை கடத்தலில் ஈடுபடுவோருக்கு, மரணதண்டனைக்கு நிகரான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

குழந்தைகள் நலனுக்காக எனது மனைவி இந்த அறக்கட்டளையை தொடங்கி உள்ளார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களும் இதனை கையில் எடுத்துள்ளன.

இதற்காக லதா செய்திருக்கும் காரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகாது. ரஜினியின் மனைவி லதா என்று சொல்லி கொண்டிருக்கும் காலம் போய், இனி லதாவின் கணவர் ரஜினி என்று சொல்லும் காலம் வரவேண்டும். உண்மையிலேயே இது மிகப்பெரிய சேவையாகும்.

‘குழந்தைகளுக்கு அமைதி என்ற அமைப்பை தொடங்க வேண்டும் என்பது லதாவின் நீண்ட கால கனவாக இருந்தது. அது இன்று நனவாகி உள்ளது என்றார் அவர். இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிக்கலில் சிக்கியிருக்கும் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான தொலைப்பேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவை அடங்கிய செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இப்படிப்பட்ட நிகழ்ச்சியை குழந்தைகளுக்காக தொடங்கிய லதா ரஜினிகாந்தின் நடவடிக்கையானது மிகவும் பாராட்டுக்குரியது என டத்தோ அப்துல் மாலிக் கூறினார். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டுமென கேட்டுக் கொண்ட அவர், சென்னையில் நடந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாகக் கூறினார். அதோடு இந்த அமைப்பிற்கு டத்தோ அப்துல் மாலிக் நிதியுதவி வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன