ஷாஆலம், நவ. 26-

சீபீல்ட் ஆலயத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்திற்கு பின்னணியிலுள்ளவர்களை போலீஸ் உடனடியாக கைது செய்ய வேண்டும் அதோடு, தவறான செய்திகள் மக்கள் மத்தியில் பரவுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா. உதவித் தலைவருமான டத்தோ சிவராஜ் சந்திரன் வலியுறுத்தினார்.

சீபீல்ட் ஆலயத்தில் வன்முறை அரங்கேறிய சில மணி நேரத்தில் 2 இந்திய கும்பல்கள் மோதிக் கொண்டன என்று போலீஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டது தவறான ஒன்று என அவர் சுட்டிக் காட்டினார். உண்மை நிலவரம் அறியாமல் செய்தி வெளியிடுவது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார்.

சீபீல்ட் ஆலயத்தில் பின்னிரவு 2.30 மணியளவில் நுழைந்தவர்கள் பெரும்பாலும் மலாய்க்காரர்கள் என்றாலும் அதில் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளார்கள் என்ற செய்தி தற்போது கிடைத்துள்ளது.

சீபீல்ட் ஆலய விவகாரத்தை இனப் பிரச்னையாக திசை திருப்ப வேண்டும் என்பதற்காக ஒரு கும்பல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் இனக் கலவரம் என்ற செய்தியை பரப்பி அதன் பின்னால் ஆலயத்தை அபகரிக்கும் செயல் அம்பலமாகியுள்ளது.

இது இனப் பிரச்னையல்ல என்பதை மலாய்க்காரர்களும் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அதோடு, இந்தியர்களும் தெளிவாக விளக்கத்தை பெற்றுள்ளார்கள். இத்தருணத்தில் இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்வது போலீசாரின் கடமை என டத்தோ சிவராஜ் சந்திரன் சுட்டிக் காட்டினார்.

ஆலய விவகாரத்திற்கு தீர்வு காணும் நடவடிக்கை சுமுகமான முறையில் நடக்க வேண்டுமே தவிர வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. இது நாட்டின் நல்லிணக்கத்தை பாதிக்கும் என அவர் கூறினார். போலீஸ் துறை இந்த விவகாரத்தை உடனடியாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என சிவராஜ் கேட்டுக் கொண்டார்.