பெஸ்தாரி ஜெயா, ஆக. 12-
அரை நூற்றாண்டு போராட்டத்திற்குப் பின் பத்தாங் பெர்ஜுந்தாய் (பெஸ்தாரி ஜெயா) கம்போங் ஹோல்மூட் தோட்டத்தில் நிலம் வாங்கியவர்களுக்கு தனித்தனி நிலப்பட்ட வழங்க நில இலாகா ஒப்புதல் வழங்கிவிட்டது. விரைவில் சௌத்தர்ன் ரியல்டி நிறுவனம் நில உரிமையாளர்களை தொடர்புக் கொண்டு நிலப்பட்டாவை வழங்க ஏற்பாடுகள் செய்வார்கள் என கோலசிலாங்கூர் மாவட்ட மன்ற முன்னாள் உறுப்பினரும் சிலாங்கூர் மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவருமான பெ.திருமூர்த்தி தெரிவித்தார்.
பத்தாங் பெர்ஜுந்தாய் நகரிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹோல்மூட் தோட்டத்தில் சுமார் 300 இந்தியர்கள் வீட்டுமனை லாட்டுகளாகவும் விவசாய நிலங்களாகவும் விலைக்கு வாங்கியுள்ளனர். பிரிட்டிஷ்காரர்களுக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தை சீனருக்கு சொந்தமான சௌத்தர்ன் ரியல்டி நிறுவனம் விலைக்கு வாங்கி துண்டாடல் செய்தது.
1000 ஏக்கர் பரப்பளவிலான இத்தோட்டத்தில் சீனர்கள் தலா 50 ஏக்கர் மேல் வாங்கி சொத்துடமையை பெருக்கிக் கொண்டனர். ஆனால், இந்தியர்கள் அப்போது 1 ஏக்கர் தலா 1500 வெள்ளிக்கு விற்கப்பட நிலத்தை 2 ஏக்கர் முதல் 10 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை மட்டும் வாங்க முடிந்தது என்று திருமூர்த்தி கூறினார்.
இந்தக் காலக்கட்டத்தில்தான் தோட்டத் துண்டாடலில் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறி குடியிருக்க வீடு இல்லாமல் துன்பபப்பட்டனர். இத்தருணத்தில்தான் பந்தாங் பெர்ஜுந்தாய் மஇகாவின் முன்னாள் செயலாளர் ஆசிரியர் பொ.பச்சையப்பன் 1974ஆம் ஆண்டு கோத்தா கூட்டுறவு வரை கழகத்தை அமைத்து ஹோல்மூட் தோட்டத்தில் 23 ஏக்கர் விவசாய நிலத்தை குறைந்த விலையில் வாங்கி வீட்டுமனை திட்டத்தை செயல்படுத்தினார். இதுவரை 260 தமிழர்கள் வீட்டுமனைகள் பெற்றுள்ளனர். ஆனால், இவர்கள் எவ்வித நிலப்பட்டா இன்றி விவசாய நிலத்தில் தங்கள் வசதிக்கு ஏற்ப வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
இருப்பினும், இவர்களும் தற்போது பயன்பெறவுள்ளனர். கம்போங் ஹோல்மூட்டில் தார் சாலை, குடிநீர், மின்சாரம், தொலைபேசி போன்ற வசதிகளை 1982ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை மஇகா பிரதிநியாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக பொருப்பேற்றிருந்த டான்ஸ்ரீ எம்.மகாலிங்கம் முயற்சியில் செய்து தரப்பட்டிருந்தது. அவரை தொடர்ந்து டத்தோ சிவலிங்கம், கரு.பார்திபன், முதலானோர் சேவையை தொடர்ந்தனர்.
2011ஆம் ஆண்டு ஹோல்மூட் நிலங்களை விற்பனை செய்த சௌத்தர்ன் ரியல்டி நிறுவனம் இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்க மாவட்ட நில அலுவலகத்திற்கு மனு செய்தனர். இருப்பினும், நில உரிமையாளர்கள் சிலர் காலமாகிவிட்டதாலும் சிலர் நிலங்களை விற்றுவிட்டதாலும் நில இலாகா மனுக்களை கிடப்பில் போட்டது.
சிலாங்கூர் மாநில மக்கள் சேவை இயக்கம் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக மனு பாரங்களை ஏற்று ஒவ்வொருவருக்கும் தனி நிலப்பட்டா வழங்க சிலாங்கூர் நில இலாகா ஒப்புதல் வழங்கிவிட்டதாக திருமூர்த்தி குறிப்பிட்டார். மேல் விவரங்களுக்கு பெ.திருமூர்த்தி (0192112848)
