அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சீபில்ட் ஆலயம் 2019 ஜன. வரை உடைக்கப்படாது! ஷாரி உறுதி
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சீபில்ட் ஆலயம் 2019 ஜன. வரை உடைக்கப்படாது! ஷாரி உறுதி

ஷா ஆலம், நவ. 29-

சுபாங் ஜெயா, யூஎஸ்ஜே 25இல் உள்ள சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை சிலாங்கூர் மாநில அரசு அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை உடைக்காது அல்லது அதன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாது என மந்திரி புசார், அமிருடின் ஷாரி உறுதியளித்தார்.

இதற்கு முக்கியக் காரணம் அந்த ஆலயத்தை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் தேதி வரை உள்ளது.

அதனால் இப்போது தொடங்கி வரும் ஜனவரி மாதம் வரை ஆலயத்தை இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்பதால் அதுவரை ஆலயத்தைத் தொடர்ந்து அங்கேயே நிலைப்படுத்தலாம் என்று மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமிருடின் குறிப்பிட்டார்.

இதனிடையே, அந்த ஆலயத்தின் நிலத்தை எடுத்துக் கொள்ள வரிப் பணத்தை மாநில அரசு பயன்படுத்தும் என்ற குற்றச்சாட்டை அமிருடின் மறுத்தார். அதில் ஒன்றும் உண்மையில்லை, மாறாக இப்போது அந்த ஆலயம் மீண்டும் வழக்கம் போல் செயல்பட்டு ஆலயத்தின் அனைத்து பக்தர்களும் வழிபாட்டை மேற்கொள்ள அனைத்து வழி வகைகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

இதில் ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்த சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புக்களுடனும் மாநில அரசு தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் இந்த ஆலயப் பிரச்னைக்கு மிகச் சிறந்தத் தீர்வுக் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் என்று சுங்கை துவா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அமிருடின் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன