அதிக எண்ணிக்கையில் இந்திய அமைச்சர்கள்! பெர்காசா சாடல்

கோலாலம்பூர், டிச. 3 –

இந்தியர்களில் 4 அமைச்சர்களும் ஒரு துணை அமைச்சரும் இருக்கின்றனர், இந்திய மக்கள் தொகை 7 விழுக்காடாக இருப்பதாகவும் அதனோடு ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்று பெர்காசா தலைவரான இப்ராஹிம் அலி குறிப்பிட்டுள்ளார்.

ஹராப்பானில் மலாய் இனத் தலைவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது என்று கோலாலம்பூரில் நடந்த ‘ஹிம்புனான் ஜிஹாட் பெர்காசா பேரணியில் கூடியிருந்த சுமார் 200 ஆதரவாளர்கள் முன்னிலையில் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் துறை இலாகாவைச் சேர்ந்த அமைச்சர் பி. வேதமூர்த்தி, நீர், நில, வள அமைச்சர் டாக்டர் ஏ. சேவியர் ஜெயக்குமார், தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் மற்றும் ஊராட்சித் துணை அமைச்சர் ஆர். சிவராசா ஆகிய 5 இந்திய அமைச்சர்களைக் குறிப்பிட்டு அவர் பேசியதாக நம்பப்படுகிறது.

கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டதைப் போல், அமைச்சரவையில் இன அடிப்படையிலான கோட்டாவை முன்னிறுத்தி அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை, மாறாக 4 கூட்டணி கட்சிகளிலிருந்தும் 3 என்ற விகிதாசாரத்தில் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஹராப்பானின் புதிய அமைச்சரவையில், பிகேஆர்-ஐச் சேர்ந்த எழுவர், ஜசெக, பெர்சத்துவில் இருந்து முறையே அறுவர், அமானாவில் இருந்து ஐவர், வாரிசானில் இருந்து மூவர் மற்றும் ஹிண்ரா-ப்பில் இருந்து ஒருவர் உறுப்பியம் பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்றும் இப்ராஹிம் அலி வலியுறுத்தினார். சீபில்ட் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் கலவரம் தொடர்பில், வேதமூர்த்தி போலிசாரைச் சாடி அறிக்கை விட்டிருந்தார்.

இதனால்தான், இந்தியாவைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள், இன ரீதியாகத் தூண்டிவிடப்பட்டு, அங்கிருக்கும் மலேசியத் தூதரகத்தில் கண்டனக் கடிதங்களைச் சமர்ப்பித்து உள்ளன, குழந்தைகள் உட்பட சிலர் கொல்லப்பட்டதாக அவர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, இது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.