பிரிமியர் லீக் : வெகுண்டெழுந்தது அர்செனல்!

லண்டன், டிச. 3-

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணப் போட்டியின் முன்னணி கால்பந்து அணிகளான அர்செனல் டோட்டன்ஹம் ஹொஸ்பர் சந்தித்து விளையாடிய ஆட்டம், அர்செனல் அணிக்குச் சாதகமாக முடிந்தது. டோட்டன்ஹம் முன்னிலையில் இருந்த வேளையில் அர்செனல் மிகச் சிறந்த தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுத்து வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு அர்செனலின் எமிரேட்ஸ் அரங்கில் இந்த இரண்டு அணிகளுக்கிடையிலான ஆட்டம் நடந்தது. ஆட்டம் தொடங்கிய 10ஆவது நிமிடத்தில் எரிக் டேர் பந்தை கையால் தடுத்ததால், அர்செனல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை அவ்வணியின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரரான ஹபிமாயோங் அடித்தார்.

அதன் பிறகு டோட்டன்ஹம் அணி தொடர் தாக்குதல்களை முன்னெடுத்தது. இதன் விளைவாக 30ஆவது நிமிடத்தில் டோட்டன்ஹம் அணிக்கான கோலை எரிக் டேர் அடித்தார். அவ்வணியின் மத்திய திடல் ஆட்டக்காரர் எரிக்சன் தூக்கி கொடுத்த பந்தை எரிக் டேர் தலையால் முட்டி கோலாக்கினார். இதனிடையே 34ஆவது நிமிடத்தில் அர்செனல் அணியின் தற்காப்பு வலையத்திற்கு உள்ளே டோட்டன்ஹம் ஆட்டக்காரரான சூன் கீழே வீழ்த்தப்பட்டார்.

இதனால் அவ்வணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை அவ்வணியின் கேப்டன் ஹெரி கேன் கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 1-2 என்ற கோல் எண்ணிக்கையில் டோட்டன்ஹம் அணி முன்னிலை பெற்றது.

ஆனால் பிற்பாதி ஆட்டம் தொடங்கியது முதல் அர்செனல் அணி அதிவேக ஆட்டத்தை முன்னெடுத்தது. குறிப்பாக டோட்டன்ஹம் அணியின் தற்காப்புப் பகுதிக்குள் நுழைந்து தொடர் தாக்குதல்களையும் தொடுத்தது. இதனால் 56ஆவது நிமிடத்தில் ஹபிமாயோங் அர்செனல் அணிக்கான இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தை 2-2 என்ற கோல் எண்ணிக்கையில் சமப்படுத்தினார்.

அந்த கோலை அடித்த பின்னர் அர்செனல் இன்னும் ஆக்ரோஷமாக விளையாடியது. அர்செனல் அணியின் தாக்குதல்களை சமாளிப்பதற்கு டோட்டன்ஹம் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் கடுமையாகப் போராடினார்கள். இருப்பினும் 75ஆவது நிமிடத்தில் அர்செனல் அணிக்கான 3ஆவது கோலை லெக்காஸாகி அடித்தார்.

இதனிடையே அடுத்த 2ஆவது நிமிடத்தில் அதாவது 77ஆவது நிமிடத்தில் அர்செனல் அணிக்கான மற்றொரு கோலை லுகாஸ் டோரிரா அடுத்தார். இந்த கோலினால் அர்செனல் 4-2 என்ற கோல் எண்ணிக்கையில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் அர்செனல் புள்ளிப்பட்டியலில் 4ஆம் நிலைக்கு முன்னேறியுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் செல்சீ தமது சொந்த அரங்கில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் புல்ஹெம் அணியை வென்றது. செல்சீ அணிக்கான கோலை 4ஆவது நிமிடத்தில் பெட்ரோவும் 82ஆவது நிமிடத்தில் ரூபன் லொஸ்திக் சிக்கும் அடித்தார்கள்.