வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அதிர்ஷ்டத்தால் வென்றது லிவர்பூல்! அரங்கத்தை அதிர வைத்த ஜோகன் குலுப்
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

அதிர்ஷ்டத்தால் வென்றது லிவர்பூல்! அரங்கத்தை அதிர வைத்த ஜோகன் குலுப்

லண்டன், டிச. 3-

இவ்வாண்டுக்கான பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லுமென பரவலாகப் பேசப்படும் அணிகளில் மன்செஸ்டர் சிட்டியும் லிவர்பூலும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இதுவரையில் 14 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தோல்வியே காணாமல் இருக்கும் அணிகள் என்ற பெருமையை கொண்டுள்ளன.

இந்நிலையில் திங்கட்கிழமை பின்னிரவு நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் தமது பரம வைரியான எவர்ட்டன் அணியை தமது சொந்த அரங்கில் சந்தித்து விளையாடியது. இந்த இரண்டு அணிகளும் மோதும்போது, அவ்வாட்டம் எப்போதும் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் இந்த ஆட்டமும் மிகச் சிறப்பான ஆட்டமாகவே அமைந்தது.

ஆட்டம் தொடங்கியதும் லிவர்பூல் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஆனால் அந்த அனைத்து தாக்குதல்களையும் எவர்ட்டன் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர்களும் அவ்வணியின் கோல் காவலர் பிக்பெர்ட்டும் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.

பிற்பாதியில் எவர்ட்டன் அணி திடீர் தாக்குதல்களை முன்னெடுத்து, லிவர்பூல் அணியை கலங்கடித்தது. இச்சூழ்நிலையில் லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரரான சாடியோ மானேவிற்கு கோல் புகுத்த 3 அற்புத வாய்ப்புகள் கிடைத்தன. அதனை அவர் தவறவிட்டார். 90 நிமிடங்கள் ஆன நிலையில் இரண்டு அணிகளும் கோலின்றி சமநிலையில் இருந்தன.

இதனால் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டம் சமநிலையில் முடியுமென அனைவரும் நினைத்த தருணத்தில் லிவர்பூல் தற்காப்பு ஆட்டக்காரர் அடித்த பந்தை எவர்ட்டன் கோல் காவலர் தடுக்க முயன்றார். அது கோல் கம்பத்தில் பட்டும்மீண்டும் உள்ளே வந்தது. அதை ஹொரிகி தலையால் முட்டி கோலாக்கினார். அந்த கோல் புகுந்த அடுத்த நொடி லிவர்பூல் அணியின் நிர்வாகி ஜோகன் குலுப் அரங்கத்திற்குள் நுழைந்து ஓடி ஆடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த கோலினால் லிவர்பூல் 1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

14ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் மன்செஸ்டர் சிட்டி 38 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதல் நிலையில் உள்ளது. லிவர்பூல் 36 புள்ளிகளுடன் இரண்டாம் நிலையிலும் 31 புள்ளிகளுடன் செல்சீ 3ஆம் நிலையிலும் 30 புள்ளிகளுடன் அர்செனல் 4ஆம் நிலையிலும் உள்ளது.

30 புள்ளிகளுடன் டோட்டன்ஹம் அணி 5ஆம் நிலையில் உள்ள வேளையில் தலா 22 புள்ளிகளை பெற்றுள்ள எவர்ட்டன் மற்றும் மன்செஸ்டர் யுனைடெட் ஆகிய அணிகள் முறையே 6ஆம் 7ஆம் நிலையில் உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன