கோலாலம்பூர், ஆக 12-

இணையத்தை ஆளும் தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் உலக தமிழ் இணைய மாநாடு இம்மாதம் சுல்தான் இட்ரீஸ் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.  மலேசியாவை தலைமையகமாக கொண்ட தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்வியியல் தொழில்நுட்ப பிரிவின் முதல் நிகழ்ச்சியாக இம்மாநாடு எதிர்வரும் 25, 26,27 ஆகிய நாட்களில் நடைபெறவிருப்பதாக உலக தமிழ் இணைய மாநாட்டின் தலைவர் தனேஸ் பாலகிருஷ்ணன் இன்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

உலக தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் தமிழ்நாடு, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை, கனடா, மொரிசியஸ் போன்ற நாடுகளிலிருந்து பேராளர்களும் கட்டுரை படைப்பாளர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். கட்டுரை படைப்பு மற்றும் கருத்தரங்குகள் நடைபெறும் தளமாக மட்டுமில்லாமல் உலகத் தமிழ் ஆய்வாளர்களை இணைக்கும் தளமாக இம்மாநாடு விளங்கவுள்ளதாக அவர் குறிப்பித்தார். தமிழ் இணையத்தை கருப்பொருளாக கொண்டு இம்மாநாட்டில் தமிழ்க்கல்வி, தமிழ்தொழில்நுட்பம், தமிழ்கணிமம், தமிழ்ச்செயலிகள், தமிழ்த்தட்டச்சு, மெய்நிகர்கல்வி என்று பல பிரிவுகளில் ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்படுகின்றன.

கற்றல் கற்பித்தலில் 21ஆம் நூற்றாண்டு தமிழ்க்கல்வியை முன்னிலை படுத்துவதால் அதனை பற்றியும் 21ஆம் நூற்றாண்டு கல்வியியல் உருமாற்றத்தைப் பற்றியும் ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்படுகின்றன. மாநாட்டு கட்டுரைகளை தவிர்த்து பேராசியர்  முனைவர் சு.குமரன், பேராசிரியர் மருத்துவர் செம்மல் சைட் மிராசா (தமிழ்நாடு),பேராசிரியர் முனைவர் பேரா.காமாட்சி (தமிழ்நாடு), முனைவர் ரஹிம் கமாலுடின், முனைவர் குமரவேலு இராமசாமி, ‘MindAppz தோற்றுநர் தமிழ்த்திரு தினேஸ் குமார், சிங்கப்பூர் மீடியா கோர்ப்பை சேர்ந்த தமிழ்த்திரு குணா, திருவள்ளுவன் இளக்குவனார் போன்றோரின் கருத்தரங்குகளும் பட்டறைகளும் நடைபெறவுள்ளது என உலக தமிழ் இணைய மாநாட்டின் உள்நாட்டு செயலவை தலைவர் ஜனர்த்தனன் வேலாயுதம் தெரிவித்தார்.

மேலும், பகிர்வுகள், விவாதங்கள், மாநாட்டுக்கு தொடர்புடைய கருத்துகள் வரவேற்கப்பட்டு பலதுறை களஞ்சியமாக இம்மாநாடு நடைபெறும். தமிழ்க்கல்வியையும் தமிழ்க்கல்வியில் தொழில் நுட்பத்தையும் வளப்படுத்தும் நோக்கில் முழுக்க முழுக்க இளம் ஆசிரியர்களால் இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. இவர்களுடன் இளம் பொறியியலாளர்கள், மருத்துவ துறையினர், பொதுச் சேவை துறையினர் என 100 விழுக்காடு இளைஞர்களின் ஆதரவிலும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் ஆர்வமிக்க தேசியப்பள்ளி ஆசிரியர்களும் கைக்கோர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் பேராளர்களுக்கு கட்டணமாக 200 வெள்ளியும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 100 வெள்ளியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். முதலில் பதியும் 100 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச நுழைவு உட்பட, இலவச தங்கும் வசதியும் உணவும் வழங்கப்படும் என ஜனர்த்தனன் விளக்கமளித்தார். தமிழ் ஆர்வலர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

2 COMMENTS

  1. அருமையான முயற்சி. இம்மாநாட்டில் கலந்து பயனுற ஆர்வமாக உள்ளேன். ஏற்பாட்டுக் குழுவினருக்கு என் மனமுவந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Comments are closed.