அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சீபீல்ட் ஆலய சிக்கல்: தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் முனைப்பு – பொன்.வேதமூர்த்தி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

சீபீல்ட் ஆலய சிக்கல்: தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் முனைப்பு – பொன்.வேதமூர்த்தி

கோலாலம்பூர், டிச. 3

சீபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் அண்மையில் நிகழ்ந்த சம்பவம், அதன் தொடர்பிலான பதற்றம் ஆகியவற்றை தற்பொழுது மத்திய அரசும் மாநில அரசும் ஒருசேரக் கையாளுகின்றன என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் நிருவாகம் குறித்து தீர்க்கமான முடிவை எட்டுவதற்காக மத்தியக் கூட்டரசும் சிலாங்கூர் மாநில அரசும் அணுக்கமாக செயலாற்றுகின்றன.

இந்த வேளையில், ஆலய நிர்வாகம் குறித்து மல்லுக்கு நிற்கும் இரு தரப்பாரும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் தரப்பில் இருந்து பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து அமைக்கப்படும் புதிய நிருவாகத்தின் கீழ் ஆலயம் இனி செயல்பட வேண்டும் என்ற கருத்து பொதுவாகவும் பரவலாகவும் சமுதாயத்தில் பிரதிபலிக்கிறது.

இதற்கிடையில், 1956 அரசாங்க நடவடிக்கைச் சட்டம், பிரிவு 9-இன்படி தொண்டு அறக்கட்டளை அமைப்பது தொடர்பாக, இந்த ஆலய நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களையும் தன்னுடைய அலுவலக வளாகத்தில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று தேசிய சட்டத் துறைத் தலைவர், கடந்த நவம்பர் 29-ஆம் நாளில் தெரிவித்தக் கருத்து குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆலய பாதுகாப்பு மற்றும் சமூக அமைதி இரண்டையும் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் முனைப்பான நடவடிக்கை மேற்கோண்டிருக்கும் இந்த வேளையில், நடுவராகப் செயல்பட விரும்புவதாக மலேசிய இந்து சங்கம் முன் வைத்துள்ள பரிந்துரைக்கு அவசியமில்லை.

நம்பிக்கைக் கூட்டணி அரசின் மத்திய அமைச்சர்களும் சிலாங்கூர் ஆட்சி மன்றமும் அணுக்கமாக செயல்பட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவை எட்ட முடியும் என்பதை வலியுறுத்துவதாகவும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன