சென்னை, டிச. 4-

சின்மயியை சும்மா விடப் போவது இல்லை என்று டப்பிங் சங்க தலைவர் ராதாரவி தெரிவித்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்த பாடகி சின்மயி தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

முன்னதாக அவர் தென்னிந்திய டப்பிங் கலைஞர் சங்க தலைவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் ராதாரவிக்கு மலேசிய அரசு டத்தோ பட்டமே கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் சின்மயி.

ராதாரவிக்கு மலேசிய அரசு டத்தோ பட்டம் கொடுக்கவில்லை. நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி சான் ஆகியோரின் பெயர்கள் உள்ளதே தவிர ராதாரவியின் பெயர் இல்லை என்று டுவிட்டரில் கருத்திட்டார் சின்மயி.

அதோடு ராதாரவிக்கு டத்தோ பட்டம் வழங்கவில்லை என்று மலாக்கா அரசு அனுப்பி வைத்த கடிதத்தை சின்மயி ட்விட்டரில் வெளியிட்டு தான் பொய் சொல்லவில்லை என்றார்.

சின்மயி வைரமுத்துவை பிளாக்மெயில் செய்து பார்த்தார். அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்றதும் என் பக்கம் திரும்பிவிட்டார். மலேசியாவில் டத்தோ பட்டம் வழங்குவது யார் என்று கூட அவருக்கு தெரியவில்லை. நான் டத்தோ பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவிற்கு எதிராக பேசியதற்காக சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதை ராதாரவி மறுத்தார். ஆனால் இப்போது சின்மயி வைரமுத்து விவகாரத்தை மறந்துவிட்டு ராதாரவி பக்கம் திரும்பிவிட்டார் என பலர் கருத்து தெரிவித்து வருவதும் குறுப்பிடத்தக்கது.