ராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை! உறுதியான தகவல்!!!! அநேகனின் சிறப்புச் செய்தி

கோலாலம்பூர், டிச. 4-

நடிகர் ராதாரவி தமது பேருக்கு முன்னாள் போடும் டத்தோ விருது போலியானது என பிரபல பின்னணி பாடகி சின்மயி தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதோடு மலாக்காவைச் சேர்ந்த அதிகாரியிடம் இது குறித்து விசாரித்ததாகவும், அதற்கான ஆதாரத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ராதாரவி, சின்மயி, வைரமுத்துவிடம் காரியம் நடக்கவில்லை என்பதால் என் மீது பழி சுமத்துகிறார் என கூறியதோடு, மலாக்கா சுல்தான் என்பவரிடன் டத்தோ பட்டத்தை பெற்றுக் கொண்ட நிழல் படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது நடிகர்களுக்குள் நடக்கும் சாதாரண வாக்குவாதன் என விட்டுவிடாமல், மலாக்கா மாநில அரசு உண்மையில் அவருக்கு விருது வழங்கியதா? என்பது குறித்து விளக்கம் கேட்க அநேகன் இணையத்தள பதிவேடு, சில முக்கிய நபர்களை தொடர்பு கொண்டோம். அதில் மிக முக்கியமான நபர், மலாக்கா மாநில அரசிடம் ராதாரவி டத்தோ பட்டத்தை பெறவில்லை என்பதை அடித்துக் கூறினார்.

2008ஆம் ஆண்டு மலாக்கா மாநில அரசு இந்தி நடிகர் ஷாருகானுக்கு டத்தோ பட்டம் வழங்கியது. அதன் பிறகு எந்தவொரு இந்திய நடிகருக்கும் (மலேசியாவை தவிர்த்து) டத்தோ பட்டத்தை மாநில அரசு வழங்கவில்லை என மலாக்கா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மகாதேவன் கூறினார்.

2012ஆம் ஆண்டு வெளிவந்த திட்டம் என்ற மலேசிய திரைப்படத்தில் நடிப்பதற்காக 2 மாதங்கள் ராதாரவி மலேசியாவில் இருந்தார். அப்போது மலாக்கா மாநில அரசு அவருக்கு டத்தோ விருது வழங்கவிருப்பதாக செய்திகள் கசிந்தன. குறிப்பாக மலேசியாவில் தலைசிறந்த நடிகர்களுக்கு டத்தோ விருது கொடுக்காமல் ராதாரவிக்கு ஏன் கொடுக்க வேண்டுமென்ற கேள்வியும் எழுந்தது.

அதன் பின்னர் அது குறித்த எந்தச் செய்தியும் வெளிவரவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து, ராதாரவி நடித்த திரைப்படங்களில் டத்தோ என்ற அடைமொழியுடன் அவரது பெயர் இடம்பெற்றது மலேசியர்களுக்கு வியப்பை கொடுத்தது. ராதாரவி மாநில ஆளுநரிடமிருந்து இருந்து டத்தோ விருதை பெற்றுக் கொண்ட நிழல்படம் மலேசிய ஊடகங்களில் வெளிவரவில்லை. அதிகாரப்பூர்வ சடங்கில் கலந்து கொள்ளாமல், பின்னர் ராதாரவி டத்தோ விருதை பெற்றுக் கொண்டார் என மலேசியர்கள் எண்ணினார்கள்.

டத்தோ மகாதேவன்

இப்போது இந்த விவகாரம் தொடர்பில் பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளதால், இந்த விவகாரம் மலேசியர்கள் மத்தியிலும் பூதகரமாக வெடித்துள்ளது. மலாக்கா மாநில அரசு விருது வழங்கிய பட்டியலில் ராதாரவியின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் அவர் எந்த டத்தோ விருதை குறிப்பிடுகிறார் என்பது எனக்குத் தெரியாது என டத்தோ மகாதேவன் குறிப்பிட்டார்.

மலாக்கா மாநில ஆளுநரிடமிருந்து டத்தோ விருது பெற்றவர்கள் நேரடியாக அதனைப் பெற வேண்டும். குறிப்பாக டத்தோ சரவணன், டத்தோ டி.மோகன், டத்தோ அசோஜன் போன்றவர்கள் அந்த விருதை நேரடியாக வந்து பெற்றுக் கொண்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் மேலும் விளக்கம் கேட்க அநேகன், மலாக்கா மாநில முதல்வரின் சிறப்பு அதிகாரி பிரசாந்த் குமார் பிரகாசத்தை தொடர்பு கொண்டோம். அவர் கூறிய விஷயம் வியப்பை கொடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பில் சின்மயிடம் ராதாரவிக்கு டத்தோ விருதை மாநில அரசு வழங்கவில்லை என்ற தகவலை கூறியதே தாம்தான் எனக் கூறினார். மாநில அரசு அலுவலகத்தில் ராதாரவிக்கு டத்தோ விருது வழங்கியதற்கான ஆதாரங்கள் இல்லை. அவர் ஆளுநரிடமிருந்து விருதையும் பெறவில்லை என்பதை மறு உறுதிப்படுத்தினார்.

மலாக்கா மாநில முதல்வரின் சிறப்பு அதிகாரி பிரசாந்த் குமார்

ஆனால் மலாக்கா சுல்தான் என கூறப்படும் தரப்பிடமிருந்து அவர் டத்தோ விருதை பெற்றுள்ளதாகத் தெரிகின்றது. அந்த விருதை மாநில அரசோ அல்லது மத்திய அரசோ அங்கீகரிக்கவில்லை என பிரசாந்த் கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பில் செய்தியாளர் அறிக்கையை வெளியிடுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்படாத மலாக்கா விருதை பல இந்திய தொழிலதிபர்களும், தலைவர்களும் கொண்டுள்ளதாக இந்த 2 நபர்களிடம் பேசியதிலிருந்து தெரிகின்றது. இந்த விவகாரத்திற்கு பிறகு பலரது போலி விருதுகள் குறித்த தகவல் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விவகாரத்தில் இறுதியில் ராதாரவி பயன்படுத்தும் டத்தோ பட்டத்தை மலாக்கா மாநில அரசு வழங்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.. இதிலிருந்து சின்மயி கூற்று உண்மையாகியுள்ளது. இதற்கு ராதாரவி என்ன பதில் சொல்லுவார்?