வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > சீபில்ட் ஆலயத்தை காக்க முற்பட்டவர்களை கைது செய்வது ஏன்? – டி.மோகன் கேள்வி
சமூகம்முதன்மைச் செய்திகள்

சீபில்ட் ஆலயத்தை காக்க முற்பட்டவர்களை கைது செய்வது ஏன்? – டி.மோகன் கேள்வி

கோலாலம்பூர், டிச 5
143 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீபில்ட் ஆலயத்தை காப்பாற்றுவதற்காக போராடியவர்களையும் காவல் துறை கைது செய்திருப்பது வருத்தம் அளிக்கிறது. கலவரத்திற்கு காரணமானவர்கள், அதில் ஈடுபட்டவர்களை கைது செய்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் சமுதாய உணர்வோடு ஆலயத்தை காக்க முற்பட்டவர்களை கைது செய்து அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இந்த விவகாரத்தை அரசாங்கம் சீர் தூக்கி பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மஇகாவின் உதவித்தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கலவரத்தின் பின்னணி என்ன? யார் இதனை செய்தார்கள் என்ற அடிப்படையில் அது சார்ந்தவர்களை கைது செய்து விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிப்படும். அதனை விடுத்து ஆலயத்திற்கு சாமி கும்பிட வந்தவர்களையும், ஆலயத்தை காக்க போராடியவர்களையும் கைது செய்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல. கலவரத்தில் ஈடுபட்ட மலாய் சமூகத்தை சார்ந்த சிலர் கைது செய்ப்பட்டிருப்பதை வரவேற்கின்ற அதே சூழலில், சம்பந்தமில்லாமல் அப்பாவி பொதுமக்கள் சிலர் கைது செய்யப்பட்டு சரியான தீர்வு இல்லாமல் அலைவது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது என்றார் அவர்.

மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களும், ஆலயத்திற்கு வருகை புரிந்தவர்களும் ஒன்றா? என்ற நிலைப்பாடு மேலோங்கும் வண்ணம் காவல் துறை அனைவரையும் கைது செய்து வருவது ஏற்புடையதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கடந்து இந்த விவகாரத்தை பார்க்க வேண்டுமென்பதே எனது நோக்கம். இந்த விவகாரத்தை பொறுத்தமாட்டில் நமது இந்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் சமுதாய உணர்வோடு குரல் எழுப்ப வேண்டும்.

இன்றைய இந்திய அமைச்சர்கள் கடந்த காலங்களில் பல போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் என்ற முறையில் இந்த விவகாரத்தின் உண்மை நிலையையும், இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப சூழ்நிலையையும் நன்கு உணர்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

எதிர்கட்சியில் இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து இருக்கின்றோம் என்ற உணர்வின் அடிப்படையில்

சமுதாய உணர்வோடு ஆலயத்தை காக்க போராடிய நிலையில் கைது நிலைக்கு தள்ளப்பட்ட இந்திய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு கரம் கொடுக்க நமது அமைச்சர்கள் முன் வர வேண்டுமென நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் டத்தோ டி.மோகன் தமதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன