முகப்பு > விளையாட்டு > அர்செனலிடம் சமநிலைக் கண்டது மென்.யுனைடெட் !
விளையாட்டு

அர்செனலிடம் சமநிலைக் கண்டது மென்.யுனைடெட் !

மென்செஸ்டர், டிச.6 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. வியாழக்கிழமை அதிகாலை ( மலேசிய நேரம் ) நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2 – 2 என்ற கோல்களில் அர்செனலுடன் சமநிலைக் கண்டது.

இந்த சமநிலை முடிவால் , மென்செஸ்டர் யுனைடெட் புள்ளிப் பட்டியலில் 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டு முறை அர்செனல் முன்னணி வகித்தப்போதும், அந்த இரண்டு முறையும் சமநிலைக் கோல்களைப் போட்டு மென்செஸ்டர் யுனைடெட் தோல்வியில் இருந்து தப்பித்தது.

கடந்த 20 ஆட்டங்களில் தோல்வியே காணாத அர்செனல் புதிய நிர்வாகி, உனய் எமெரியின் நிர்வாகத்தில் தொடர்ந்து பீடுநடைப் போடுகிறது. அர்செனல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி மிகப் பெரிய மாற்றங்களைச் செய்திருந்தார்.முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர் ரொமெலு லுக்காகூ, மத்திய திடல் ஆட்டக்காரர் போல் பொக்பாவை களமிறக்கவில்லை.

26 ஆவது நிமிடத்தில் ஸ்கோட்ரன் முஸ்தாபி போட்ட கோலின் மூலம் அர்செனல் 1 – 0 என்ற கோலில் முன்னணிக்கு சென்றது. எனினும் 30 ஆவது நிமிடத்தில் அந்தோனி மார்சியல் போட்ட கோலின் வழி, மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்தை சமப்படுத்தியது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் அலெக்சாண்டர் லக்காசேட் அர்செனலின் இரண்டாவது  கோலைப் போட்டார். எனினும் ஒரு நிமிடத்துக்குப் பின்னர் ஜெசி லிங்காட் போட்ட கோலின் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் ஆட்டத்தை சமப்படுத்தியது.

இந்த ஆட்டத்தின் முடிவில் தாம் மகிழ்ச்சி அடைவதாக மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ தெரிவித்துள்ளார். எனினும் பிரீமியர் லீக் போட்டியில் கடந்த மூன்று ஆட்டங்களில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற தவறியிருப்பது அதன் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில் ஜோசே மொரின்ஹோ எத்தனை நாட்கள் நிர்வாகி பொறுப்பில் நீடிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்களுடன் மொரின்ஹோவுக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் அவர் அந்த கிளப்பில் தொடர்ந்து நீடிப்பது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன