புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > சபாநாயகரை முடிவால் அதிருப்தி – வெளிநடப்பு செய்த தே.மு. எம்பிக்கள் !
முதன்மைச் செய்திகள்

சபாநாயகரை முடிவால் அதிருப்தி – வெளிநடப்பு செய்த தே.மு. எம்பிக்கள் !

கோலாலம்பூர், டிச.6-

கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரனை மக்களவையில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட சபாநாயகர் டத்தோ முஹமட் அரிப்பின் முடிவில் அதிருப்தி அடைந்த தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

இன்றைய மக்களவைக் கூட்டம் மதியம் ஒரு மணிக்கு, மதிய உணவுக்காக ஒத்தி வைக்கப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர், தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து  வெளியேறினர். சபாநாயகரின் முடிவு தவறான முன்னுதாரணமாக விளங்கி விடக்கூடாது என தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

14 ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத்தில் சிவராஜ் பெற்ற வெற்றியை ரத்து செய்வதாக கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. நீதிமன்றத்தின் முடிவு தொடர்பில் மேல் முறையீடு செய்ய சிவராஜூக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது.

அதுவரை அவர் மக்களவைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள உரிமை உள்ளது. மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் 36a(2) பிரிவும் அதனை வலியுறுத்துவதாக அஹ்மாட் சாஹிட் குறிப்பிட்டார். 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படாத பட்சத்தில் நீதிபதி, சிவராஜின் நிலைக் குறித்து ஒரு முடிவை எடுத்து அதனை சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரிவிப்பார்.

இந்த விவகாரத்தில் சபாநாயகர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என அஹ்மாட் சாஹிட் தெரிவித்தார். ஒருவேளை சபாநாயகர் தவறு செய்திருந்தால் அவர் மன்னிப்புக் கோரலாம் என அவர் மேலும் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன