வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > வாரணாசியில் பரவாசி மாநாடு: ம.இ.கா.விலிருந்து 200 பேராளர்கள்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
இந்தியா/ ஈழம்சமூகம்முதன்மைச் செய்திகள்

வாரணாசியில் பரவாசி மாநாடு: ம.இ.கா.விலிருந்து 200 பேராளர்கள்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், டிச. 6-

புலம்பெயர்ந்த இந்தியர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரவாசி பாரதிய திவாஸ் மாநாடு நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு வாரணாசியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ம.இ.கா.வை பிரதிநிதித்து 200 பேராளர்கள் கலந்து கொள்வார்கள் என அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.

வியாழக்கிழமை மேலவைத் தலைவர் அலுவலகத்தில் மலேசியாவுக்கான இந்திய தூதர் மிருதுல் குமாருடன் சந்திப்பு நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மேற்கண்டவாறு கூறினார். இந்தியாவில் புகழ்பெற்ற வாரணாசியில் இம்முறை பரவாசி மாநாடு நடைபெறுகின்றது. இந்துக்களின் பிரசித்தி பெற்ற புண்ணிய தளத்தில் இம்முறை பரவாசி நடைபெறுவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பரவாசி மாநாட்டில் ம.இ.கா. சார்பில் நூற்றுக்கணக்கான பேராளர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு இதுவரையில் 200 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார். இம்முறை இந்திய அரசு பரவாசியில் கலந்து கொள்ளும் பேராளர்களுக்கு மிகச் சிறந்த சலுகையை வழங்குகிறது. இந்த மாநாட்டிற்கு பிறகு கும்பமேளாவிற்கு பேராளர்களை அழைத்துச் செல்லவும் இந்திய அரசு முடிவு செய்திருக்கின்றது.

கும்பமேளா என்பது இந்துக்களின் முதன்மை வழிபாட்டுத் தலம். இங்கு 30 லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடுவார்கள். இந்துக்களின் புண்ணிய தலம் என்றழைக்கப்படும் கும்பமேளாவிற்கு மலேசிய பேராளர்களை அழைத்துச் செல்ல இந்திய அரசு இணக்கம் தெரிவித்திருக்கின்றது. அதோடு, புதுடில்லியில் ஜனவரி 26ஆம் தேதி நடக்கும் குடியரசு தின அணிவகுப்பிலும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகின்றது என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

ஜனவரி 21 தொடக்கம் 27ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகின்றது. இந்த பரவாசி மாநாடு இந்தியா, மலேசியா நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவதோடு வர்த்தக ரீதியில் மலேசிய இந்தியர்களுக்கு வழிவகை செய்யும் மாநாடாகவும் அமையும் என அவர் கூறினார். இந்தியாவிலிருந்து இதர நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள். வர்த்தகர்கள், தொழில் துறை வல்லுநர்கள், அறிஞர்கள் என பலரது அறிமுகம் இந்த மாநாட்டில் கிடைக்கும்.

இந்த வாய்ப்பைத் தவற விடாமல் 15ஆம் தேதிக்குள் தங்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும் என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார். மலேசிய இந்தியர்கள் பரவாசி மாநாட்டில் பெரும் அளவில் கலந்து கொள்கிறார்கள். மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் உள்ள உறவு மேம்படுவதற்கு இந்த வருகை முத்தாய்ப்பாக அமைகின்றது என மலேசியாவுக்கான இந்திய தூதர் மிருதுல் குமார் தெரிவித்தார்.

இந்த ஆண்டு வாரணாசியில் நடைபெறும் பரவாசி மாநாடு இதுவரை நடந்த மாநாடுகளைக் காட்டிலும் மிகச் சிறப்பான முறையில் நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன