புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > குக்குப் தீவு சர்ச்சை குறித்து பதில் அளியுங்கள் ; இல்லையேல் பதவி விலகுங்கள் !
முதன்மைச் செய்திகள்

குக்குப் தீவு சர்ச்சை குறித்து பதில் அளியுங்கள் ; இல்லையேல் பதவி விலகுங்கள் !

கோலாலம்பூர், டிச.7-

ஜோகூரில் சர்ச்சைக்குரிய குக்குப் தீவில் தேசிய பூங்கா அமைக்கப்படுவது குறித்து ஜோகூர் மந்திரி பெசார் ஒஸ்மான் சாபியான் முறையாக விளக்கமளிக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அவர் தமது பதவியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என பிரதமரின் ஊடகங்களுக்கான ஆலோசகர் டத்தோ ஏ. காடிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 28 ஆம் தேதி பிரிபூமி பெர்சத்து கட்சியின் உச்சமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஜோகூர் மாநில அரசாங்கத்தில், அரச குடும்பம் தலையிடுவது இல்லை என மந்திரி பெசார் தம்மிடம் தெரிவித்ததாக காடிர் ஜாசின் கூறினார். ஆனால் மாநில அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை ( அது அரை ஏக்கர் நிலமாக இருந்தாலும் ) ஜோகூர் அரச குடும்பம் எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படும் விவகாரம் குறித்தும் மந்திரி பெசாரிடம் காடிர் ஜாசின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அது பற்றி தமக்கு தெரியாது என்றும், முந்தைய தேசிய முன்னணி ஆட்சியில் அது நடந்திருக்கலாம் என்றும் ஒஸ்மான் சாபியான் கூறியதாக காடிர் ஜாசின் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் 1999 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டில் ஒஸ்மான் , தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்ததையும் காடிர் ஜாசின் நினைவுப்படுத்தியுள்ளார்.

தேசிய முன்னணி அரசாங்கத்தைப் போல் ஒஸ்மானும் அவரின் நண்பர்களும் இந்த நிலத்தை ஜோகூர் அரச குடும்பத்துக்கு  வழங்க அனுமதி அளித்திருந்தால், முந்தைய அரசாங்கத்துக்கும் அவருக்கும் எந்த ஒரு வேற்றுமையும் இல்லை என காடிர் ஜாசின் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ஒஸ்மான், மக்களுக்கு முறையான விளக்கத்தை வழங்கத் தவறினால் அவர் தமது பதவியை விட்டு விலகுவதே மேல் என காடிர் ஜாசின் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன