முகப்பு > விளையாட்டு > மொரின்ஹோவுக்குப் பதில் பொச்சாடினோ ??
விளையாட்டு

மொரின்ஹோவுக்குப் பதில் பொச்சாடினோ ??

மென்செஸ்டர், டிச.7-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் வேளையில் நிர்வாகி ஜோசே மொரின்ஹோவுக்குப் பதில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் நிர்வாகி மவுரிசியோ பொச்சாடினோவை நியமிக்க மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் ஆலோசித்துள்ளதாக தி சன் நாளிதழ் கூறுகிறது.

எனினும், குறுகிய காலத்தில் பொச்சடினோ கொண்டு வரப்படுவாரா அல்லது அவரை ஒப்பந்தம் செய்ய வரும் கோடை காலம் வரை மென்செஸ்டர் யுனைடெட் காத்திருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரீமியர் லீக் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டியைக் காட்டிலும் மென்செஸ்டர் யுனைடெட் 18 புள்ளிகளில் பின் தங்கியுள்ளது.

மென்செஸ்டர் யுனைடெட் , லீக் பட்டியலில் 8 ஆவது இடத்தில் இருக்கும் வேளையில் நிர்வாகி ஜோசே மொரின்ஹோவுக்கும் ஆட்டக்காரர்களுக்கும் இடையில் மிகப் பெரிய பனிப்போர் நிலவி கொண்டிருக்கிறது. கடந்த நான்கு பிரீமியர் லீக் ஆட்டங்களில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றிப் பெற தவறியிருக்கிறது.

சனிக்கிழமை புல்ஹாம்முக்கு எதிரான ஆட்டத்திலும் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற தவறினால், மொரின்ஹோ தமது நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என கால்பந்து விமர்சகர் லீ டிக்சன் தெரிவித்துள்ளார். லூயி வான் ஹாலை நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கியபோதே, டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் மவுரிசியோ பொச்சட்டினோவைக் கொண்டு வர மென்செஸ்டர் யுனைடெட் தலைமை நிர்வாக அதிகாரி எட் வூட்வேர்ட் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், பொச்சட்டினோ மென்செஸ்டர் யுனைடெட் கொடுத்த அழைப்பை நிராகரித்தார். இந்நிலையில் புதிய ஆட்டக்காரர்களை வாங்குவதில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் வேளையில் பொச்சடினோ புதிய சவாலைத் தேடி ஓல்ட் டிரப்போர்ட்டுக்கு இடம் மாறலாம் என தி சன் நாளேடு கூறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன