பிடிபிடிஎன் கடனுக்கு சம்பளத்திலிருந்து பிடித்தம்; தற்காலிக ஒத்திவைப்பு -மஸ்லி மாலேக்

0
16

கோலாலம்பூர், டிச 7
பிடிபிடிஎன் கல்வி கடனை திருப்ப செலுத்த சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யும் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்றப் பின்னரே பிடிபிடிஎன் பெற்றவர்களின் சம்பளத்திலிருந்து பணம் பிடித்தம் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படும் என அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

மாதம் 2,000 வெள்ளிக்கு மேல் சம்பளம் பெறும் கடனாளிகள் எதிர்வரும் ஜனவரி முதல் தங்களது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்வதற்கான தொகைக்கான அட்டவணையை பிடிபிடிஎன் அறிவித்திருந்தது.

மாதம் 2,000 வெள்ளிக்கும் 2,499.99 வெள்ளிக்கிடையே சம்பளம் பெறும் பிடிபிடிஎன் கடனாளிகள் தங்களது சம்பளத்திலிருந்து 2 விழுக்காடு தொகையான 49 வெள்ளி 99காசையும் மாதத்திற்கு 2.500 வெள்ளி முதல் 2,999 வெள்ளி 99 காசு சம்பளம் பெறுவோர் மூன்று விழுக்காடு அதாவது 75 வெள்ளிக்கும் 89.99 காசுக்குமிடையே சம்பளத்தல் பிடித்தம் செய்யப்படும் என பிடிபிடிஎன் அறிவித்திருந்தது.

மூவாயிரம் வெள்ளி மேற்பட்டவர்கள் ஐந்து விழுக்காடு தொகையாக 150 வெள்ளி முதல் 199 வெள்ளி வரையிலும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாதந்தோறும் 4,000 வெள்ளி முதல் 5,999வெள்ளி 99 காசு சம்பளம் பெறுவோர் 320 வெள்ளி முதல் 479 வெள்ளி 99காசுவரை சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் பிடிபிடிஎன் அறிவித்திருந்தது.

கடனாளிகளின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யும் தொகையின் அளவு குறித்து அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்மறைவான கருத்துக்களை தெரிவித்ததோடு கடனாளிகளுக்கு சுமையாக இருப்பதால் திரும்பச் செலுத்தும் தொகையை மறுபரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.