திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கத்தின் கட்டிட திறப்பு விழா! செப்டம்பர் மாதம் ஆசிய தொழிலாளர் கூட்டுறவு மாநாடு!
சமூகம்முதன்மைச் செய்திகள்

தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கத்தின் கட்டிட திறப்பு விழா! செப்டம்பர் மாதம் ஆசிய தொழிலாளர் கூட்டுறவு மாநாடு!

கோலாலம்பூர், டிச 11
மலேசியாவில் உள்ள 14 ஆயிரம் கூட்டுறவு கழகங்களில் சிறந்தவற்றில் 37ஆவது இடத்தை பிடித்துள்ள தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கம், தலைநகரில் 6 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடத்தை வாங்கியுள்ளதாகவும், அதன் அதிகாரப்பூர்வ திறப்பு விழா இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறவிருப்பதாகவும் அதன் தலைவர் டாக்டர் ஆறுமுகம் கூறினார்.

இதனிடையே மலேசியாவில் சிறந்த கூட்டுறவு கழகங்களில் 100 இடங்களுக்குள் இடம்பெற வேண்டுமென பலர் முயற்சி செய்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கம் 37ஆவது இடம் பிடித்துள்ளது இந்த கூட்டுறவு கழகத்தின் அடைவுநிலையைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். இது மிகச் சிறந்த அடைவுநிலை. கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளை சரிசெய்து, சங்கத்தை மேம்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.

குறிப்பாக மலேசியாவில் மலாய்க்காரர்களுக்கு பல கூட்டுறவுக் கழகங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு இணையாக நாமும் செயல்பட்டு வருகிறோம். தலைநகரில் ஜாலான் ஈப்போவில் 6 மாடிகள் கொண்ட 2 கட்டடத்தையும் தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கம் வாங்கியுள்ளது என டாக்டர் ஆறுமுகம் கூறினார்.

தலைநகரின் மையப் பகுதியாகக் கருதப்படும் ஜாலான் ஈப்போவில் இந்த இரண்டு மாடி கட்டடம் அமைந்துள்ளது. வரும் சனிக்கிழமை டிசம்பர் 15ஆம் தேதி இந்த கட்டடத்தின் திறப்பு விழா நடைபெறுகின்றது. அதற்கு மை ஸ்கில் அறவாரியத்தின் நிறுவனர் வழக்கறிஞர் பசுபதி சிறப்பு வருகை புரிவதோடு கட்டடத்தையும் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார் என டாக்டர் ஆறுமுகம் குறிப்பிட்டார்.

இந்த கட்டடத்தை 1 கோடியே 15 லட்சம் வெள்ளிக்கு தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கம் வாங்கியுள்ளது. இப்போதைய நிலையில் 9 கோடியே 50 லட்சம் சொத்துடமையை கூட்டறவுக் கழகம் கொண்டுள்ளது. அதோடு 14 கோடி கடனுதவியையும் தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கம் வழங்கியுள்ளதாக டாக்டர் ஆறுமுகம் குறிப்பிட்டார்.

முன்னதாக கூட்டுறவுக் கழகத்தில் உள்ள உறுப்பினர்களின் பிள்ளைகளின் மேற்கல்விக்காக வட்டியில்லா கடனை வழங்கி வருகிறோம். அதோடு தடையின்றி சந்தா செலுத்தும் உறுப்பினர்களுக்கு சிறப்புச் சலுகைகளையும் வழங்கியுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

அதோடு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதிவரை ஆசிய தொழிலாளர் கூட்டுறவு மாநாட்டை நடத்துவதற்கு தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது நமது சங்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை. சுமார் 30 நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என ஆறுமுகம் பெருமிதம் தெரிவித்தார்.

வரும் காலங்களிலும் தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கம் உறுப்பினர்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை முன்னெடுக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன