கோலாலம்பூர், டிச.12 –

வரும் சனிக்கிழமை வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெறவிருக்கும் ஏ.எப்.எப் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாவது இறுதி ஆட்டத்தில் வியட்நாமை வீழ்த்துவோம் என தேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் மலாயாவின் தலைமை பயிற்றுனர் டான் செங் ஹோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை இரவு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற முதல் இறுதி ஆட்டத்தில் மலேசியா 2 – 2 என்ற கோல்களில் வியட்நாமுடன் சமநிலைக் கண்டது. இரண்டு கோல்களில் பின் தங்கியிருந்த மலேசியா இறுதியில் இரண்டு கோல்களைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தியது. எனினும் முதல் இறுதி ஆட்டத்தில் மலேசிய அணி, சற்று பலவீனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

குறிப்பாக முதல் பாதியில் 15 நிமிடங்களில் ஆட்டத்தில் கவனத்தை இழந்ததால், ஹரிமாவ் மலாயா இரண்டு கோல்களில் பின் தங்க நேரிட்டது என செங் ஹோ தெரிவித்தார். இந்நிலையில் சனிக்கிழமை ஹனோய்யில் நடைபெறவிருக்கும் இரண்டாவது இறுதி ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா ஆட்டக்காரர்கள் தங்களின் தவறுகளைக் குறைத்துக் கொண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இன்னும் 90 நிமிடங்கள் எஞ்சியிருப்பதால், கால்பந்து விளையாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை செங் ஹோ மீண்டும் நினைவுறுத்தினார்.  ஒரு பயிற்றுனர் என்ற முறையில், முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்வதில் தாம் முழு கவனம் செலுத்தப் போவதாக செங் ஹோ கூறினார்.எனினும் முதல் ஆட்டத்தில் கிடைத்த 80 ஆயிரம் ரசிகர்களின் ஆதரவு இரண்டாவது இறுதி ஆட்டத்தில் கிடைக்காது என்பது மட்டுமே மிகப் பெரிய குறை என்றும் அவர் சொன்னார்.