மேலும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறுகிறார்களா ? கலக்கத்தில் அம்னோ !

0
18

கோலாலம்பூர், டிச.14-

இன்று மேலும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்னோவில் இருந்து வெளியேறலாம் என நியூ ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பின்னர் அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவது குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என பரவலாகப் பேசப்படுகிறது.

இதில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலும் இருவர் நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்குக் கரை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என நியூ ஸ்ட்ரேட்ஸ் டைமஸ் கூறுகிறது.

இந்த அறுவரில் ஒருவர் முன்னாள் அமைச்சர் என்பதும் குறிப்பிடதக்கது. அம்னோவில் இருந்து வெளியேறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று நியூ ஸ்ட்ரேட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை சபா மாநிலத்தில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், 9 சட்டமன்ற உறுப்பினர்களும் அம்னோவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது.கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அம்னோ 54 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த வேளையில் தற்போது அதன் எண்ணிக்கை 44 ஆக குறைந்துள்ளது.