அம்னோ தலைவர் மீதான குற்றச்சாட்டு 46 ஆக அதிகரித்தது !

0
10

கோலாலம்பூர், டிச.14-

அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி இதுவரை எதிர்நோக்கி வந்த 45 குற்றச்சாட்டுகள் தற்போது 46 ஆக உயர்வு கண்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்தில் அஹ்மாட் சாஹிட் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அகால் பூடி அறவாரியத்துக்கு சொந்தமான நிதியில் ஒரு கோடி ரிங்கிட் முறைக்கேடு செய்தததாக அஹ்மாட் சாஹிட் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.  அகால் பூடி அறவாரியத்தின் அறங்காவலராக இருந்த, 65 வயதுடைய அஹ்மாட் சாஹிட் ஹமிட் ஹமிடி, அந்த  அறவாரியத்தின் நிதியில் இருந்து , ஒரு கோடி ரிங்கிட்டை அர்மாடா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு கடனாக கொடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் டிசம்பர் 8 ஆம் தேதி ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள அஃபின் வங்கியில் , அஹ்மாட் சாஹிட் இந்த குற்றத்தைப் புரிந்ததாக செஷன் நீதிமன்ற நீதிபதி ரொசினா ஆயோப் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.எனினும் தம் மீதான குற்றச்சாட்டை மறுத்து அஹ்மாட் சாஹிட் ஹமிடி விசாரணைக் கோரியுள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் 409 ஆவது பிரிவின் கீழ் அஹ்மாட் சாஹீட் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தப் பட்சம் 2 ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறைத் தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் செலுத்த  சட்டம் வகை செய்கிறது.

இந்த வழக்கில் அஹ்மாட் சாஹிட் மீது புதிய ஜாமின் தொகை விதிக்கப்படாதால், முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரிங்கிட் ஜாமின் தொகை நிலைநிறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டில் பிப்ரவரி 20 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என நீதிபதி ரொசினா அறிவித்தார்.