ஆலயம், மதமாற்றுப் பிரச்சினையை கவனிக்கத் தவறினார்! மோகன் ஷாண் நிராகரிக்கப்பட வேண்டும்! ஆயுட்கால உறுப்பினர் சிவசுப்பிரமணியம் சூளுரை

0
3

கோலாலம்பூர், டிச.14-
மலேசிய இந்து சங்கத்தை திசை மாற்றிக் கொண்டிருக்கும் நடப்புத் தலைவர் டத்தோ மோகன் ஷாண் தலைமைத்துவ பொறுப்புக்கு தகுதியற்றவர் என்று அதன் ஆயுட்கால உறுப்பினர் சிவசுப்பிரமணியம் சாடியுள்ளார்.

மலேசிய இந்து சங்கத்தில் தலைமைத்துவ மாற்றம் கண்டிப்பாக தேவை. டத்தோ மோகன் ஷாண் தலைமையிலான இப்போதைய தலைமைத்துவம் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறது. தேவாரப் போட்டி நடத்துவதும் திருமுறை ஓதும் போட்டி நடத்துவதும் அதன் வேலையல்ல. மாறாக இந்து சமயத்தை ஒவ்வொரு இந்துவின் நாடி நரம்புகளை தட்டி எழுப்பும் சங்கமாக மலேசிய இந்து சங்கம் இருக்க வேண்டும் என்று சிவசுப்பிரமணியம் சூளுரைத்தார்.

டத்தோ மோகன் ஷாண் தலைமையிலான மலேசிய இந்து சங்கம் தன் கடமையை நிறைவேற்றத் தவறி விட்டது. இந்து சமயத்தை கட்டிக் காக்க வேண்டிய சங்கம் அதனை செய்யாமல் வர்த்தக நோக்கத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறி விட்டது.

நாட்டில் எத்தனையோ இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த நிலையில் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷாணின் தலைமைத்துவத்தை நிராகரிக்க வேண்டும் என்று சமயப் பற்றாளருமான சிவசுப்பிரமணியம் வலியுறுத்தினார்.

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரத்தில் டத்தோ மோகன் ஷாண் முறையான நடவடிக்கை யை கையாளவில்லை. மாறாக ஆலயத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கு ஆதரித்து கடிதம் வழங்கியிருக்கிறார். இதனால் சீபீல்ட் ஆலயப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. டத்தோ மோகன் ஷாண் நினைத்திருந்தால் சீபீல்ட் ஆலயப் பிரச்சினைக்கு பேச்சு நடத்தி தீர்வு கண்டிருக்கலாம். இப்படி மலேசிய இந்து சங்கம் தன் கடமைகளை நிறைவேற்றாமல் அதன் உண்மையான இலக்கை திசை மாற்றிக் கொண்டுச் சென்ற டத்தோ மோகன் ஷாண் தலைமைத்துவம் நிராகரிக்கப்பட வேண்டும் என்றார் சிவசுப்பிரமணியம்.

கடந்த காலங்களில் தன் இலக்கை நோக்கி மிகவும் சிறப்பாக சேவையாற்றி மலேசிய இந்து சங்கம் டத்தோ மோகன் ஷாண் தலைமையில் தொய்வு கண்டுள்ளதை மலேசிய இந்துக்கள் மறுக்க மாட்டார்கள். ஆகையால், மலேசிய இந்து சங்கத்தின் தேர்தலில் டத்தோ மோகன் ஷாணை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்று சிவசுப்பிரமணிய ம் சூளுரைத்தார்.