முகப்பு > கலை உலகம் > பிரிக்பீல்ட்ஸில் தலயின் விவேகம் ப்ரோமோவில் எழுந்த சர்ச்சை!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பிரிக்பீல்ட்ஸில் தலயின் விவேகம் ப்ரோமோவில் எழுந்த சர்ச்சை!

பிரிக்பீல்ட்ஸ், ஆக.13-

மலேசிய தல அஜித் ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் மணி 1.00 அளவில் பிரிக்பீல்ட்ஸிலுள்ள லிட்டல் இந்தியாவில் விவேகம் திரைப்படத்திற்கான ப்ரோமோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷா அலாமிலுள்ள பெர்மாத்தா மாற்றுதிறனாளிகள் இல்லத்திலிருந்து 7 மாற்றுதிறனாளிகள் வரவழைக்கப்பட்டதோடு அவர்கள் முன்னிலையில் விவேகம் திரைப்படத்திலுள்ள  பாடல்களுக்கு உள்ளூர் நடன கலைஞர்கள் நடனமாடினர்.

இந்நிகழ்ச்சிக்காக மலேசிய தல அஜித் ரசிகர் மன்றத்தினர் அங்கு போடப்பட்டிருந்த கூடாரத்தில் விவேகம் படத்தின் போஸ்டரை மாட்டியிருந்தது. அதில் விவேகம் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுள்ளதாக முதன்முதலில் கூறிய நேஷன் பிலிம் ஸ்டூடியோ மற்றும் அப்படத்தின் விநியோகிப்பாளர் என கூறப்பட்ட எம்.எஸ்.கே. புரோடக்‌ஷன் ஆகிய நிறுவனங்களின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு வந்திருந்த டி சினிமா நிறுவனத்தின் உரிமையாளர் மாராஸ் ரவி, விவேகம் படத்தை என்னுடைய நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ள நிலையில் வேறு நிறுவனங்களின் பெயரையும் சின்னத்தையும் எப்படி அப்படத்தின் போஸ்டரில் போட முடியும்? என அம்மன்றத்தின் தலைவர் தேவேந்திரனிடம் கேள்வியெழுப்பினார்.

இந்த போஸ்டர் டி சினிமாவின் அறிவிப்புக்கு முன்னரே செய்யப்பட்டு விட்டதாக கூறி அவரை தேவேந்திரன் ஒரு வழியாக சமாதானபடுத்தி படுத்தினார். அதன் பிறகு, மாராஸ் ரவியின் கோரிக்கைக்கு ஏற்ப அவர் கொண்டு வந்த டி சினிமா பெயரும் சின்னமும் பொறிக்கப்பட்ட புதிய போஸ்டர் அங்கு மாட்டிவிடப்பட்டது. அதோடு, மலேசிய தல அஜீத் ரசிகர் மன்றத்தின் விவேகம் படத்தின் புரோமோ நிகழ்ச்சியில் மாராஸ் ரவியும் இணைந்துக்கொண்டார்.

இதனிடையே, இவ்விவகாரம் குறித்து தேவேந்திரனிடம் அனேகன்.கோம் வினவிய போது, இந்த படத்தை மலேசியாவில் யார் வெளியிடுகிறார்கள் என்பது இன்னமும் குழப்பமாக உள்ளதாக கூறினார். இப்படம் 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் நிலையில் கூடிய விரைவில் மலேசியாவில் வெளியிடும் நிறுவனம் எதுவென்பது தெரிந்துவிடும். இந்நிகழ்ச்சிக்கு நேஷன் பிலிம் ஸ்டூடியோ நிறுவனத்தை அழைத்த போது யாரும் வரவில்லை என தேவேந்திரன் கூறினார்.

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சுமார் 30 பேருக்கு கேள்வி பதில் போட்டி வாயிலாக விவேகம் திரைப்படத்தின் டீ சட்டைகள் வழங்கப்பட்டது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன