மாலைக்கு பதிலாக நூல்களை பரிசளியுங்கள்; பிறந்தநாள் விழாவில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பரிந்துரை

0
1

கோலாலம்பூர், டிச. 16
தமக்கு மாலைகளை அணிவிப்பதிற்கு பதிலாக நூல்களை வழங்கினால் ம.இ.கா. தலைமையகத்தில் அமையவிருக்கும் நூலகத்திற்கு அது பெரும் துணை புரியும் என ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார். ம.இ.கா. தலைமையகத்தில் நூலகத்தை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மலேசியா மட்டுமின்றி அனைத்து தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் இந்த நூலகத்தில் வைக்க வேண்டும் என்ற இசை தமக்கு இருப்பதாகவும் அதற்கு ம.இ.கா. உறுப்பினர்கள் தம்மோடு துணை நிற்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக ம.இ.கா.வின் தேசியத் தலைவரும் மேலவை தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை ம.இ.கா. தலைமையகத்தில் மிக விமரிசையாக நடந்தது. இதில் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு மாலை அணிவித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். இந்த பிறந்தநாள் விழாவில் தலைமையுரை ஆற்றிய டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ம.இ.கா. புத்துயிர் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

14ஆவது பொதுத்தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்த பல கட்சிகள் காணாமல் போய்விட்ட நிலையில் ம.இ.கா. இன்னமும் மகத்தான உறுப்பினர்களின் துணையோடு சிறப்பாக செயல்படுகிறது என்றார் அவர். கட்சியை வலுப்படுத்துதான் நமது நோக்கம். கட்சி உறுப்பினர்களுக்கான அனைத்து செயல்திட்டங்களையும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் சிறப்பாக நடைபெறும். அந்த வரிசையில் இப்போது தலைமையகத்தை உருமாற்றும் பணி நடந்து வருகின்றது. அதில் முக்கிய ஒன்று நூலகத்தை ம.இ.கா. தலைமையகத்தில் அமைப்பதுதான்.

இந்த நூலகத்திற்குத் தேவையான அனைத்து நூல்களையும் ம.இ.கா. உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்ட டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ம.இ.கா. என்றுமே கட்சி உறுப்பினர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் என நம்பிக்கை தெரிவித்தார். அதோடு தமக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அவர் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இந்த பிறந்தநாள் விழாவில் ம.இ.கா.வின் துணைத் தலைவர் டத்தோ எம்.சரவணன், உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன், டத்தோ முருகையா, ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநில தலைவர்கள், தொகுதி கிளைத் தலைவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here