மஇகா சுயநலமாக இருந்திருந்தால் இந்திய சமுதாயம் உரிமையை இழந்திருக்கும் -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

0
2

கோலாலம்பூர், டிச. 16
ம.இ.கா. சுயநலக்கட்சி என பலர் குறை கூறி வந்தாலும் அதில் துளி அளவும் உண்மையில்லை. ம.இ.கா. சுயநலக்கட்சியாக இருந்திருந்தால் இந்திய சமுதாயம் எப்போதோ உரிமையை இழந்திருக்கும் என மேலவைத் தலைவரும் ம.இ.கா.வின் தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ம.இ.கா. தேசிய தகவல் தொடர்பு குழுத் தலைவர் சிப்பாங் குணாளன் தலைமையில் நடந்த தகவல் செயல் திறன் பயிலரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ம.இ.கா. எப்போது தொடங்கப்பட்டதோ அன்று தொடங்கி இன்றுவரை இந்திய சமுதாயத்தின் உரிமையை பாதுகாக்க தொடர்ந்து போராடி வந்துள்ளது. அந்த போராட்டத்தின் விளைவாகத்தான் இன்று இந்திய சமுதாயத்தின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். ம.இ.கா. ஒன்றும் செய்யவில்லை என்று குறை கூறி ஆட்சியை மாற்றியவர்கள் இன்னமும் தாங்கள் அரசாங்கம் என்பதை உணராமல் இருக்கிறார்கள். இன்றும் ம.இ.கா.வை வைத்துதான் அரசியல் நடத்துகிறார்கள் என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சாடினார்.

அவர்களது இயலாமைக்கும் ம.இ.கா.வை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இன்று மக்கள் விழித்துக் கொண்டார்கள். அமைச்சரவையில் உள்ளவர்கள் சமுதாயத்திற்காக என்ன சேவையை செய்கிறார்கள் என்பதை மக்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனியும் ம.இ.கா.வை குறை சொல்லி அரசியல் நடத்துவது எடுபடாது என்றார் அவர். கடந்த கால ஆட்சியில் ஒரே இந்தியர்தான் முழு அமைச்சராக இருந்தார். அப்போதும் கூட சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. இப்போது அமைச்சரவையில் 4 இந்திய அமைச்சர்கள் இருந்தும் பிரச்னைகளை கண்டறிவதற்கே அவர்களுக்கு நேரமில்லை.

ம.இ.கா.தான் இந்தியர்களை பிரதிநிதிக்கும். ம.இ.கா.தான் இந்தியர்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளும் காலம் மிகத் தொலைவில் இல்லை என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முன்னதாக கட்சியின் முதல் ஆயுதப் படை தகவல் தொடர்பு பிரிவுதான். அதன் அதிகாரிகள் பீரங்கி போல் செயல்பட வேண்டும். ம.இ.கா. வெற்றி பெற தகவல் பிரிவு சிறப்பாக செயல்பட வேண்டும் என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நினைவுறுத்தினார்.

ம.இ.கா. தேசிய தகவல் பிரிவுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட வி.குணாளன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், தகவல் பிரிவு அதிகாரிகள் என 380க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.