வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அரசியலைமைப்புச் சட்டத்தைத் திருத்துவீர்!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அரசியலைமைப்புச் சட்டத்தைத் திருத்துவீர்!

பெட்டாலிங் ஜெயா, டிச.20

நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கட்சி தாவும் செயலை முறியடித்து அம்னோ உறுப்பினர்களை பார்ட்டி பெர்சத்துவில் இணைவதைத் தடுக்கும் அணுகுமுறை கொண்ட ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டியது அவசியமாகும் என்று புக்கிட் குளுகோர் தொகுதி எம்.பி, ராம் கர்ப்பால் சிங் வலியுறுத்தினார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதை முறியடிக்க அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்.

இனி வரும் காலங்களில் ஏற்படக்கூடிய கட்சித் தாவும் நடவடிக்கைகளை மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டு தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாக எண்ணி எதிர்ப்புத் தெரிவிப்பர்.

வாக்காளர்கள் தங்கள் கட்சியைப் பிரதிநிதித்த வேட்பாளர்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கின்றனர், மாறாக அவர்களின் தனிப்பட்ட திறனை வைத்து அல்ல. அதனால் இந்தக் கட்சித் தாவும் செயலை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பத்திரிகையாளர்களிடம் ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.

இதில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த தனியார் சட்ட மசோதா கொண்டு வரப்படுமா என்ற கேளிக்கு பதிலளித்த போது குறிப்பிடுகையில், அதுகுறித்துத் தற்போது ஜசெக தலைவர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், இச்சட்டத் திருத்தத்திற்கு 3இல் 2 பெரும்பான்மையைப் பெறுவதுதான் இப்போது பெரிய தடையாய் இருக்கிறது என்பதையும் நான் மறுக்கவில்லை.

தற்போது 119 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 3இல் 2 பெரும்பான்மையை பக்காத்தான் கொண்டிருக்கவில்லை. அப்படி சபாவில் உள்ள கூட்டணி கட்சியை இணைத்தாலும் கூட இந்தச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள இன்னும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

பினாங்கு மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு கட்சி தாவும் செயலைத் தடுக்கும் சட்டம் கடந்த 2012ஆம் ஆண்டில் வரையப்பட்ட போதிலும் அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகத்தான் இருக்கிறது. தற்போதைய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை எடுத்துக் கொண்டால் தாங்கள் விரும்பும் கட்சியில் அரசியல் தலைவர்கள் இணைவதற்கான உரிமை அனுமதிக்கப்பட்டுள்ளது.

கட்சி தாவுவது வெறுக்கத்தக்க ஒரு செயலாக இருப்பதால் அதைத் தடை செய்ய வேண்டும். அதற்கு முன் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியது அவசியமாகும்.

இதில் இந்த 5 ஆண்டை எதிர்கட்சி உறுப்பினராக முடிக்க மிகவும் சோம்பலாய் இருக்கிறது என்று முன்னாள் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியது தொடர்பில் கருத்துரைத்த ராம் கர்ப்பால், முதலில் இவர்கள் இந்த ஆண்டை எதிர்கட்சி உறுப்பினர்களாக நிறைவு செய்ய வேண்டும். அதன் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டால் புதிய கட்சியில் அவர்கள் இணைந்து கொள்ளலாம். இதுதான் நியாயமான ஒன்றாகும். இதனைத் தொடர்ந்து வாக்காளர்களே முடிவு செய்வர் என்று பினாங்கு மாநில ஜசெக உறுப்பினருமான ராம் கர்ப்பால் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன