முகப்பு > கலை உலகம் > வசூலைக் குவித்த மலேசிய திரைப்படங்களில் திருடாதே பாப்பா திருடாதே 2ஆவது இடம்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

வசூலைக் குவித்த மலேசிய திரைப்படங்களில் திருடாதே பாப்பா திருடாதே 2ஆவது இடம்!

கோலாலம்பூர், டிச. 20-

இந்தக் காலகட்டம் உள்நாட்டு தமிழ் திரைப்படங்களுக்கு ஒரு பொன்னான காலகட்டம் என்று சொல்ல வேண்டும் என்கிறார் கீதையின் ராதை திரைப்பட நாயகி ஷாலினி பாலகிருஷ்ணன். மலேசிய தமிழ் திரைப்படங்கள் மிக அபார வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன என்றார் அவர்.

இந்த வளர்ச்சிக்கு மலேசிய ரசிகர்களின் பங்கு அளப்பரியதாகும். கீதையின் ராதை திரைப்படம் வெற்றிப்படமானது. அந்த வரிசையில் என்னுடைய அடுத்த படமான திருடாதே பாப்பா திருடாதே திரைப்படமும் வெற்றி பெற்றிருக்கின்றது. நான் மலேசிய ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கீதையின் ராதை படத்தின் வசூலை திருடாதே பாப்பா திருடாதே படத்தின் வசூலும் மாறுபட்டிருக்கலாம். கீதையின் ராதை திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அந்த பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு அதன் வசூல் அமைந்திருந்தது.

திருடாதே பாப்பா திருடாதே சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் அது நல்ல வசூலை பெற்று தந்திருக்கிறது. 2018ஆம் ஆண்டிற்கான மலேசியாவில் அனைத்து மொழி திரைப்படங்களின் பட்டியலில் திருடாதே பாப்பா திருடாதே வசூலின் அடிப்படையில்12ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் வெடிகுண்டு பசங்க படத்திற்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இது தம்முடைய கலை படைப்பிற்கு மலேசிய ரசிகர்கள் வழங்கிய மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும் என்றார் அவர்.

இந்த வரிசையில் நான் மலேசியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விமர்சனங்களை எப்போதும் நான் ஒதுக்குவது கிடையாது. எல்லா நிலைகளிலும் விமர்சனங்களை ஏற்று என்னுடைய குறைகளை போக்கி வந்துள்ளேன். அதேவேளையில் ஒரு படம் வசூலில் அடிப்படையில் வெற்றிப் படமா? தோல்விப் படமா? என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

அந்த வகையில் என்னுடைய கீதையின் ராதை, திருடாதே பாப்பா திருடாதே ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள்தான். பினாஸ் வெளியிட்ட பட்டியல் அதற்கான சான்றாக அமையும். சிலர் என்னுடைய கீதையின் ராதை படம் சிறந்த வசூலை பெற்றது, மாறாக திருடாதே பாப்பா திருடாதே அந்த அளவிற்கு வசூலை குவிக்கவில்லை என்று கருதுகின்றனர்.

எனவே என்னுடைய இரண்டு படங்களும் வெற்றிப் படங்களே. யார் வேண்டுமானாலும் அதை பட்டியலில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எப்போதுமே ஒரு படத்தோடு மற்றொரு படத்தை சேர்த்து ஒப்பீடு செய்து விமர்சிப்பது சரியானதாக இருக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும் என ஷாலினி பாலகிருஷ்ணன் கூறியிருக்கின்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன