இந்தோனேசியாவில் சுனாமி; பலி எண்ணிக்கை 168ஆக அதிகரிப்பு

0
6

ஜகர்த்தா, டிச. 23
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் பலியானவர்கள் எண்ணிக்கை 168ஆக உயர்ந்தது என்று இந்தோனேசிய பேரிடர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் 745 பேர் காயமடைந்துள்ள நிலையில் மேலும் 30 பேரை காணவில்லை என அது கூறியது.

ராட்சத அலைகளால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் அழிந்ததாக தேசிய பேரிடர் அமைப்பின் பேச்சாளர் சுதோப்போ புர்வோ நூக் ரோஹோ தெரிவித்தார்.

இதனால் கடலோரத்தில் இருந்த சுற்றுப்பயணிகளும் பொதுமக்களும் தங்களை காப்பாற்றிக் கொள்ள ஆளுக்கொரு திசையில் ஓடினர். இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளிலிருந்து மாண்டவர்களின் உடல்கள் மீட்புத் துறையினரால் மீட்கப்பட்டன.

ராட்சத அலைகள் தாக்கியபோது கட்டடங்களின் கூரைகளும் வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. மேற்கு ஜாவா கடலோரப் பகுதியில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமான சரித்தா கடலோரப் பகுதியிலும் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

எரிமலை வெடிப்பு காரணமாக கடலுக்குள் அடியில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும் பேரழைகள் ஏற்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.