திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > எம்ஜிஆரின் இறுதி நாள்…!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

எம்ஜிஆரின் இறுதி நாள்…!

23-ஆம் தேதி இரவில் ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் எம்.ஜி.ஆர். படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இரவு 12.30 நெஞ்சு வலிப்பதாக என்று கூறி தண்ணீர் வாங்கி குடித்ததும் மயக்கம் அடைந்தார்.  மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர்.
மீண்டும் இதயத்துடிப்பு வருவதற்கு உரிய சிகிச்சைகள் செய்தார்கள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. அதிகாலை 3 மணிக்கு காலனின் மடியில் துயில் கொண்டார் மக்கள் திலகம்.  24.12.1987 எம்ஜிஆருக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் அன்று விடியவே இல்லை. இருள் சூழ்ந்தது. “திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால்  எம்.ஜி.ஆர். மறைந்து விட்டார்” என்று டாக்டர்கள் அறிவித்தபோது அனைவரும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.  எம்.ஜி.ஆர். அருகிலேயே அழுதபடி இருந்த ஜானகி அம்மாள், மயக்கம் அடைந்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுச் செய்தியை அறிந்ததும், ஜெயலலிதா,  தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி உடனடியாக ராமாவரம் தோட்டத்துக்கு விரைந்தனர். அமைச்சர்கள், பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் மக்கள் திகலத்திற்கு இறுதி மரியாதை செலுத்த கண்ணீருடன் காத்திருந்தனர். வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் தான் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மரணம் என்கிற செய்தி ஊர்ஜிதமாக நகரினுள் பரவியது. தொண்டர்கள் செயலிழந்து கதறித்துடித்தனர்.
ராமாவரம் தோட்டத்தில் இருந்து பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்த ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு 6 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு அதில் எம்.ஜி.ஆர். உடல் வைக்கப்பட்டது.
லட்சக்கணக்கான மக்கள் எம்.ஜி.ஆர். உடலைக் கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.  எம்.ஜி.ஆர். மரணம் அடைந்ததை அடுத்து நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் இடைக்கால முதல் அமைச்சராக பதவி ஏற்றார். எம்.ஜி.ஆரின் மறைவு அவரது மனைவி ஜானகி அம்மாளை வெகுவாகப் பாதித்தது.
அண்ணா சமாதிக்கு தென்புறத்தில், எம்.ஜி.ஆர். உடலை சந்தனப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். இறுதி ஊர்வலம் ராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு உடல் அருகே அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தனர்.
ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம். ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களில் பலர் அழுதபடி இருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.  பொதுமக்கள் விடிய விடிய எம்.ஜி.ஆர். உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முழுவதும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சினிமா ஸ்டூடியோக்கள் மூடப்பட்டன. எம்.ஜி.ஆர். மறைவையொட்டி தமிழ்நாட்டில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. எம்.ஜி.ஆருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டது.
எம்.ஜி.ஆர். இறுதி ஊர்வல ராணுவ வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட ஜெயலலிதா

எம்ஜிஆர் உடல் வைக்கப்பட்ட ராஜாஜி ஹாலில் அவரது தலைமாட்டிலேயே 21 மணிநேரம் ஜெயலலிதா 2 நாட்களாக நின்றிருந்தார் ஜெயலலிதா. எம்ஜிஆர் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அதில் ஏற ஜெயலலிதாவும் முயற்சித்தார். ஆனால் ராணுவ வாகனத்தில் இருந்த எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மாளின் உறவினர் நடிகர் தீபக் வேகமாக வந்து ஜெயலலிதாவின் கைகளை ராணுவ வாகனத்தில் இருந்து அகற்றி கீழே தள்ளிவிட்டார். ஜெயலலிதாவும் நடுரோட்டில் கீழே விழுந்தார். இச்சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.  ஒரு பெண்ணாக ஜெயலலிதா சந்தித்த அவமானங்களின் வீடியோப் பதிவு காட்சிகள், சென்னை தூர்தர்ஷன் அலுவலக  அறையில் இன்றும் தூங்கிக்கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் இறுதிச் சடங்கு முடிந்த உடன் கலங்கிப்போன ஜெ.போயஸ் தோட்ட ‘வேதா நிலையம்’ வீட்டுக்குள் வேகமாக நுழைந்து, தன் அறையைப் பூட்டிக்கொண்டார். நான்கு மணி நேரம் கழித்து வெளியே வந்த ஜெயலலிதா, அதன் பின் எடுத்தது அரசியல் விஸ்வரூபம்.

பிரதமர் ராஜீவ் காந்தி வெளியிட்ட அனுதாபச் செய்தி : 
 “மிகச்சிறந்த பாரதக் குடிமகனின் மரணத்துக்காக நாடு துக்கம் அனுசரிக்கிறது. எம்.ஜி.ஆர். சிறந்த தேசபக்தர். நாட்டுப்பற்று அவர் இதயத்தில் ஆழப்பதிந்து இருந்தது. இந்தியாவின் பாரம்பரியத்தில் அவர் பெருமிதம் கொண்டு இருந்தார். இந்தியாவின் ஒற்றுமையைப் புனிதமாகவும், ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதை புனிதமான கடமையாகவும் அவர் கருதினார்.இந்திய மக்களால் மட்டும் அல்லாமல் இலங்கை நாட்டு மக்களாலும் போற்றப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவரது மரணத்தில் என் சொந்த இழப்பு மிகப்பெரியது ஆகும். எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சி, என் தாத்தா நேருவின் சிலை திறப்பு விழா ஆகும். அவரது முடிவுக்கு 36 மணி நேரத்துக்கு முன்பாக அந்த விழா நடந்தது. அப்போது என் குடும்பத்தின் 3 தலைமுறையினருடன் அவருக்கு உள்ள தொடர்பை எடுத்துக்கூறினார். இது அவரது விடைபெறு நிகழ்ச்சி என்று எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது” இவ்வாறு ராஜீவ் காந்தி கூறி இருந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தி :
“ஆயிரம் கருத்து வேறுபாடுகளுக்கு இடையே நான் இதய பூர்வமாக நேசித்த என் ஆருயிர் நண்பர் தமிழக முதல் அமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திடீர் மறைவு செய்தி கேட்டு அதிர்ந்து போய் இருக்கிறேன். 40 ஆண்டுகளுக்கு முன்பு அரும்பிய எங்கள் நட்பில் இடை இடையே எத்தனையோ சோதனைகள் குறுக்கிட்டபோதிலும் முதிர்ந்து கனிந்த எங்கள் நட்புணர்வு பட்டுப்போனதே இல்லை. என் சிந்தைக்கு இனிய நண்பர். செல்வாக்குமிக்க முதல்_அமைச்சர் குறுகிய காலத்தில் ஒரு கட்சியை உருவாக்கி அதனை ஆளும் கட்சியாக்கிய ஆற்றல் படைத்தவரின் இழப்பு கேட்டு இந்த நாடே துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறது. மாண்புமிகு முதல் அமைச்சரின் மறைவையொட்டி தி.மு.கழகத்தின் பொது நிகழ்ச்சிகள் இன்று முதல் ஒரு வார காலத்துக்கு ரத்து செய்யப்படுகின்றன”. இவ்வாறு கருணாநிதி கூறி இருந்தார்.
ஆந்திர முதல்_மந்திரி எம்.டி.ராமராவ் வெளியிட்ட அனுதாபச் செய்தி  :
“எம்.ஜி.ஆர். என்னுடைய கலை உலக நண்பர் மட்டுமல்ல. என் உடன் பிறந்த சகோதரரைப்போல அரசியல் வாழ்விலும் சரி, சினிமா வாழ்விலும் சரி என் குருவாக இருந்தார். அவருடைய நடைமுறைகளை பின்பற்றியே நான் வெற்றி அடைந்தேன்” என்று கூறி இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன், துணை ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, கவர்னர் குரானா மற்றும் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்_மந்திரிகள், மத்திய மந்திரிகள், அனைத்துக்கட்சி தலைவர்களும் அனுதாப செய்தி வெளியிட்டிருந்தனர். இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா, பிரதமர் பிரேமதாசா ஆகியோர் அனுதாப செய்தி அனுப்பினார்கள்.
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் 
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாசு குறையாத மன்னன் நீ என்று
உலகம் உன்னை போற்றி வணங்க வேண்டும்..
இப்படி எந்த வரிகளை எழுதினாலும், அந்த வரிகளுள் குணத்தாலும் மனத்தாலும் அடங்கிபோகும் ஒரே திலகம் மக்கள் திலகம் மட்டுமே.  இன்று அவர் இல்லை என்றாலும் பாடல்களின் பிம்பமாய், சொல்லிய சொல்லின் சித்தராய், அன்பின் புத்தராய், அவரை  தெய்வமாக நினக்கும் மக்களின் உள்ளத்தில் என்றும் மங்காத ஒளிவிளக்காய் வாழ்ந்தும் கொண்டே இருக்கிறார்.. இருப்பார்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன