வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > எம்ஜிஆர் அனைத்துலக மாநாட்டுக்கு தமிழக முதலமைச்சர் அங்கீகாரம்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

எம்ஜிஆர் அனைத்துலக மாநாட்டுக்கு தமிழக முதலமைச்சர் அங்கீகாரம்!

கோலாலம்பூர், ஆக. 13-
காலத்தை வென்ற காவியத் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு, தலைநகர் கோலாலம்பூரில் ‘எம்ஜிஆர் அனைத்துலக மாநாடும் – நூற்றாண்டு விழாவும் நடைபெறுகிறது. மலேசிய இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத்தின் (MICAS) தலைவர் எஸ்.பி.மணிவாசகம் தலைமையிலான தொண்டார்வளர் குழு முன்னின்று நடத்தும் இவ்விழாவுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்.

தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், தனது விஜிபி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ஆறரை அடி உயரமுள்ள எம்ஜிஆர் உருவச்சிலையை பிரத்தியேகமாக தயாரித்து வழங்குகிறார். இம்மாத இறுதிக்குள் தாயகத்திலிருந்து மலேசியா வந்தடையவிருக்கும் அச்சிலையை, தலைநகரில் இந்தியர்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை இரவு, தலைநகரிலுள்ள மாபெரும் மாநாட்டு மண்டபத்தில் உள்நாடு – வெளிநாடு பேராளர்களுடனான விருந்துபசரிப்புடன் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. இதற்கான நுழைவுக் கார்டுகள் கணிசமான கட்டணத்தோடு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் நாளான செப்டம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை, மலாயாப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் அனைத்துலக மாநாடு நடைபெறுகிறது. இதற்கான நுழைவு முற்றிலும் இலவசம். எம்ஜிஆரின் கொள்கைகள், வாழ்க்கை நெறிமுறைகள், அரசியல் மறுமலர்ச்சி, சினிமா வாழ்க்கை என பல அம்சங்கள் தொட்டு பல தமிழ் அறிஞர்களும் பேராசிரியர்களும் அனைத்துலகப் பேராளர்களும் இம்மாநாட்டில் பேசுவார்கள். தவிர, மாநாட்டு மலரும் சிறப்பு குறும்படங்களும் வெளியிடப்படும் என்று எஸ்.பி.மணிவாசகம் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மாநாடு தொடர்பான தற்காலச் செய்திகளையும் எம்ஜிஆரின் வாழ்க்கைச் சரிதை வீடியோக்களையும் மக்களுக்கு இலகுவாக தெரிவிக்கும் வகையில், ‘டாக்டர் எம்ஜிஆர் இணைய டிவி தொடங்கப்பட்டுள்ளது. http://www.drmgr.tv எனும் இணையத்தள அகப்பக்கத்தின் வழி முழு விவரங்களைக் காணலாம் என்றார் அவர்.

புதிய தலைமுறையினருக்கான எம்ஜிஆரின் சீர்மிகு செய்திகளை தெரிவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இம்மாநாட்டில் சிறப்பு முதன்மை பிரமுகராக கலந்து கொள்ள, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.மணிவாசகம் சொன்னார்.

தமிழகப் பேராளர்கள் குழுவோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு சில முக்கிய அமைச்சர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்வர் என நம்பிக்கை தெரிவித்த அவர், மலேசிய இந்திய அமைச்சர் பெருமக்களும் பங்கேற்று சிறப்பிப்பர் என்றார்.
இம்மாநாடு திட்டமிட்டப்படி நடைபெறவும் அதன் உன்னத இலக்கை அடையவும் உதவி புரிய விரும்புகின்ற நல்லுள்ளங்கள் ஏற்பாட்டுக் குழுவை அனுகலாம். தொடர்புக்கு : எஸ்.பி.மணிவாசகம் 012-2123960, கரு.பன்னீர்செல்வம் 012-3056799, சோலை பாஸ்கரன் 012-2261944.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன