பாங்கி, ஆக 13-

இந்திய சமுதாயம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் புத்தாக்க சிந்தனை, அறிவியல் திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கும் வண்ணம் கல்வி அமைச்சின் ஒத்துழைப்போடு, செடிக், யாயசான் மை நாடி, என்.எல்.எப்.சி.எஸ், உள்ளிட்டவர்களின் ஆதரவோடு அஸ்டியின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2017 கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி வாகை சூடி சாதனை படைத்தனர்.

இந்த அறிவியல் களத்தில் நாடு தழுவிய அளவில் 326 தமிழ்ப்பள்ளிகளில் இருந்து 370 குழுக்கள் பங்கெடுத்த நிலையில் 68 தமிழ்ப்பள்ளிகள் இந்த தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகின. இதில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர் பெருமக்களின் உறுதுணையோடு தங்களது அறிவியல் படைப்புகளை அரங்கேற்றியிருந்தனர்.

புத்தாக்கப் பிரிவில் ஜோகூர் தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி முதல் இடத்தையும், ஜோகூர் பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி 2ம் இடத்தையும், பெர்மாத்தாங் தமிழ்ப்பள்ளி 3ம் இடத்தையும் வென்றெடுத்தன.

போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி, ஜோகூர் பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி, பெர்மாத்தாங் திங்கி, தாமான் பெர்மாத்தா ஆகிய பள்ளிகள் தங்கம் வென்றன. வெள்ளி ஏ பிரிவில் நிபோங் திபால்,ஷாகிசர் பள்ளி வென்றது.

இந்த விழாவில் மிக முக்கியமாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் என அவரவரின் அர்ப்பணிப்பை காண முடிந்தது. குறிப்பாக ஆசிரியர் பெருமக்களின் ஈடுபாடு அளப்பரியது. 68 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், பார்வையாளர்கள் என ஜெர்மன் மலேசியன் இன்ஸ்டியூட் அரங்கமே கோலாகலம் கண்டது.

நமது தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த இளம் விஞ்ஞானிகள் உருவாக்கம் காண்கிறார்கள் என்ற கருப்பொருளோடு இந்த அறிவியல் விழா இனிதே முடிந்தது.