செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சிறந்தவற்றுள் சிறந்தது….! சினிமா 2018..!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சிறந்தவற்றுள் சிறந்தது….! சினிமா 2018..!

2018-ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 181 படங்கள் வெளிவந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதில் மிகச் சிறந்த 10 படங்களை அநேகன் செய்திதளம் பட்டியலிட்டிருக்கின்றன.

வெளியான 181 படங்களில் சுமார் 35 படங்களே நல்ல படங்கள் வரிசையில் சென்று சேர்கின்றன. வணிகர ரீதியான வசூலை கணக்கில் கொள்ளாமல், இந்த 35 படங்களில் மிகச் சிறந்த பத்து படங்களை அதன் தரத்தின் அடிப்படையில் இங்கு மிகச் சிறந்ததாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

10. படைவீரன், அண்ணனுக்கு ஜே, காற்றின் மொழி, யு டர்ன், துப்பாக்கி முனை, கனா, மெர்க்குரி, சில சமயங்களில் , இமைக்கா நொடிகள், செக்கச் சிவந்த வானம், காலா, இரும்புத் திரை, ஸ்கெட்ச், கடைக்குட்டி சிங்கம் ஆகிய 14 படங்களும் பத்தாவது இடத்தில் உள்ளன.

1. வட சென்னை

ஒரு சில கூட்டணியை பார்த்தாலே கண்ணை மூடிக் கொண்டு அவர்களின் படத்திற்கு முதல் நாளே போகலாம். அப்படிபட்ட இயக்குனர்-நடிகர் கூட்டணி என்றால் அது வெற்றிமாறன்-தனுஷ்தான். இவர்களின் பல வருட உழைப்பில் தயாரான வடசென்னை இல்லாமல் சிறந்த 10 படங்கள் பட்டியல் நிறைவாகாது. வடசென்னையின் அசல் முகத்தை இந்த அளவு ரத்தமும், சதையுமாக வேறு எந்த படமும் காட்டியதில்லை என சொல்லும் அளவுக்கு கலைரீதியான படைப்பில் விஞ்சி நிற்கிறது. திரைமொழியும் – நடிகர்களின் பங்களிப்பும் சமவிகிதத்தில் சேர்ந்த விதத்தில் வடசென்னை ஒரு காலகட்டத்தின் வாழ்வியல் பதிவு.

2. ராட்சசன்

தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே த்ரில்லர் படங்கள் சொல்லும்படி வந்துள்ளன. அந்தவகையில் இருக்கையின் நுனிவரை ரசிகர்களை கட்டிப்போட வைத்தது ராட்சசன். அடுத்து என்ன நடக்கும், யார் வில்லன் என்பதை கடைசிநொடி வரை தேக்கி வைத்து வெளிப்படுத்திய விதத்தில் எல்லோரையும் கவர்ந்துள்ளான் இந்த ராட்சசன். 17 நடிகர்களின் புறக்கணிப்பு, பல தயாரிப்பாளர்களின் புறக்கணிப்பு என்று பல வலியை சுமந்துகொண்டு இயக்குனர் ராம் குமார் இயக்கிய இரண்டாவது படம். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வந்து பெரிய வெற்றியைத் தட்டிச் சென்ற படம்.

3. நடிகையர் திலகம்

இந்த படத்தை பிடிக்கவில்லை என்று இதுவரை, ஜெமினி கணேசனின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் சொல்லி இருக்க முடியாது. சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நடிகையர் திலகம் திரைப்படம் தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் வெளியானதோடு வெற்றியும் பெற்றது. கீர்த்தி சுரேஷுக்குள் இருந்த அபார நடிகையையும் அடையாளம் காட்டியது நடிகையர் திலகம். எப்படி நடிக்க வேண்டும் என்பதற்கும், எப்படி வாழக்கூடாது என்பதற்கும் பாடமாக அமைந்த சாவித்ரியின் வாழ்க்கையை படமாக எடுத்து பெருமை தேடிக்கொண்டது திரையுலகம்.

4. பரியேறும் பெருமாள்

ஆணவக் கொலைகள் இன்றளவும் நடக்கக்கூடிய காலகட்டத்தில் சாதிய வன்மங்களை அப்பட்டமாக துகிலுரித்துக் காட்டிய விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது பரியேறும் பெருமாள். ஒழிக்கப்பட வேண்டிய இரட்டைக் குவளை மனநிலையை பகிரங்கபடுத்திய இயக்குனர் மாரி செல்வராஜின் துணிச்சல் பாராட்டுக்குரியது. ஒவ்வொரு காட்சியும் ரசித்து ரசித்து எடுத்திருந்தார் இயக்குனர்.

 

5. மேற்குத் தொடர்ச்சி மலை

மண்சார்ந்த படங்களுக்கு வரவேற்பு இருக்காது என்று தெரிந்தும் சமரசங்களுக்கு இடமளிக்காது கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காது கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் வாழ்வியல் படைப்பாக திகழ்கிறது. வசூலில் இது கல்லா கட்டதா படம் என்றாளும், விருதுகள் பட்டியலில் இல்லாமல் போகாது. ஹீரோயிசம் என்பதே துளியளவும் இல்லாத இந்தப் படம் நாவல் படிப்பது போன்ற உணர்வை தந்தது. இயக்குனர் லெனின் பாரதி, தயாரிப்பாளர் விஜய் சேதுபதி ஆகியோரின் சினிமா மீதான மரியாதைக்கு ஒரு சல்யூட்.

6. 96

காதலே… காதலே… என்ற வரிகள் இந்தாண்டில் பலருடைய வாயில் முணுமுணுக்க பட்ட வரிகள். கோவிந் வசந்தாவின் இசை அப்படியொரு மேஜிக் செய்து எல்லோரையும் அந்தப் பாடலுக்கு அடிமையாக்கி வைத்திருந்தது. திரிஷாவை ஜானு கதாபாத்திரத்தில் அதிகம் ரசித்தனர். ஆனால் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. பாடல்கள் – நடிப்பு – திரைக்கதை என அனைத்து அம்சங்களிலும் முழுமையான படைப்பாக வந்ததால் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது 96.

7. கனா

இந்த வருடத்தின் இறுதியில் வந்து ஹிட் அடித்திருக்கும் படம் கனா. தமிழ் சினிமாவில் வந்த ஒரு சில விளையாட்டு தொடர்பான படங்களில் சிறந்தது என ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்கும் பெண் எப்படி இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடும் அளவிற்கு செல்கிறாள் என்பது ஒரு வரிக் கதை என்றாலும், அதில் ஒரு விளையாட்டின் கனாவையும், ஒரு விவசாயின் கனாவையும் கலந்து சொன்னது இந்த படத்தின் வெற்றி. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் இருவரும் தங்கள் நடிப்பால் மொத்த படத்தையும் ரசிகர்களோடு கட்டி போட்டனர்.

8. சவரக்கத்தி

கொலைக்கத்திக்கும் சவரக்கத்திக்கும் இடையிலான வாழ்வா சாவா துரத்தலே சவரக்கத்தி. இயக்குனர் மிஷ்கின் மற்றும் இயக்குனர் ராம் கூட்டணியில் உருவாகி வெற்றி பெற்ற படம். எளிமையான இனிமையான படத்தைப் பார்த்த உணர்வை தந்தது ஜி.ஆர். ஆதித்யாவின் இயக்கம். தமிழச்சி தங்க பாண்டியனின் அண்ணாந்து பார் பாடலும், மிஷ்கினின் தங்க கத்தி வெள்ளிக் கத்தி சவரக்கத்தி பாடலும் நம் மனதை வெகுவாக கவர்கின்றன. பெரிய நடிகர்கள், பாடல்கள் என சில விஷயங்கள் இல்லாததால் படத்திற்கு ஒப்பனிங் இல்லையென்றாலும், படம் பார்த்த பலரைத் திருப்திபடுத்தியது இந்த சவரக்கத்தி.

9. கடைக்குட்டி சிங்கம்

நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சிறப்பாகவும் எடுத்து பாண்டிராஜ், கார்த்திக்கு ஹாட்ரிக் கிராமத்து வெற்றியை கொடுத்திருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். கார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. எப்போதும் பாஸ் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத்து கதையில் ஒரு படி மேலே சென்றார், தற்போது ஹாட்ரிக் கிராமத்து கதையாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.

10. இரும்புத்திரை 

நீண்ட இடைவெளிக்கு பின் விஷாலுக்கு வெற்றி கொடுத்த படம் இரும்புத்திரை. அறிமுக இயக்குனர் P.S. மித்ரன் இயக்கத்தில் தொழில்நுட்ப படமாகவும், இணையத்தால் மக்களுக்கு இருக்கும் பிரச்சனையை பேசும் படமாகவும் இருந்ததே இதன் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம். ஆதார், விமான டிக்கெட், கைத்தொலைபேசி என நாம் பயன்படுத்தும் அனைத்தும் எப்படி ஒரே நொடியில் எதிரியாகும் என்ற எச்சரிக்கை மணி அடித்ததற்காக இரும்புத்திரைக்கு சிறப்பு நன்றிகள். விஷால் படத்திலேயே 100 கோடிக்கு மேல் வசூலித்த படமும் இது தான் என கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன