ஷா ஆலம், ஆக. 13-

பெர்சத்து இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்த கூட்டத்தில் துன் டாக்டர் மகாதீரை நோக்கி காலணிகள், நாற்காலிகள் முதலிவை வீசப்பட்டு கூட்டம் இடையிலேயே நிறுத்தப்பட்டது.  நேற்று சிலாங்கூர் ஷா ஆலம் இளைஞர் மற்றும் பண்பாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மறைப்பதற்கு எதுவுமில்லை என்ற விளக்கக் கூட்டத்தில், 1985ஆம் ஆண்டு மெமாலி சம்பவத்தைப் பற்றி முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது விளக்கமளித்துக் கொண்டிருந்த போது, மேடையில் இருந்த அவரை நோக்கி, கூட்டத்தில் கலந்து கொண்ட கும்பல் ஒன்று காலணிகள், பீங்கான் தட்டுகள், நாற்காலிகள், தண்ணீர் போத்தல்கள் போன்ற பொருள்களை வீசி பரபரப்பை ஏற்படுத்தியதோடு புகைக் குண்டுகளையும் வீசியது.

கூட்டம் தொடங்கி இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர், மாலை 5.30 மணியளவில் அந்த அராஜகக் கும்பல், மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த மகாதீரை நோக்கி அந்தப் பொருள்களை வீசத் தொடங்கியது. கூட்டத்தினரை நோக்கிப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டு, அவை தீயை வெளியிட்டதன் காரணமாக, அங்கு பெரும் பரபரப்பு எற்பட்டது. அமளி துமளியான சமயத்தில் அந்தக் கும்பல் கலந்து கொண்டோரைத் தாக்கவும் தொடங்கியது கூட்டத்தினர் தங்களின் பாதுகாப்புக் கருதி அங்கிருந்து பரபரக்க வெளியேறினர்.

மேடையில் இருந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்கள் என்ன செய்வதென்று அறியாத நிலையில் திகைத்திருந்த வேளையில், பெர்சத்து கட்சியின் இளைஞர் அணி அவர்களை மேடையிலிருந்து கீழிறக்கி பாதுகாப்பாக வெளியே கூட்டிச் சென்றனர்.

கூட்டம் மாலை 6 மணியளவில் முடிக்கத் திட்டமிருந்த வேளையில், அது இடையிலேயே நிறுத்தப்பட்டது. இதனிடையே அசம்பாவிதத்துக்குக் காரணமான கும்பலை பெர்சத்து கட்சியினர் துரத்திச் சென்ற காட்சியும் நடந்தேறியது. அந்தச் செயலுக்குக் காரணமானவர்கள் என நம்பப்படும் இரு நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அது பற்றி விளக்கமளித்த பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், மகாதீரைக் காயப்படுத்தும் நோக்கில் பல பொருள்களை அந்தக் கும்பல் அவர் மீது வீசியதாகவும் அவர்களின் நோக்கமே அவரைக் காயப்படுத்தி கூட்டத்தை நடத்த விடாமல் நிறுத்தவே எனக் குறிப்பிட்டார்.

அந்தப் பொறுப்பற்ற அராஜகக் கும்பலால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட சம்பவம் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கலந்து கொள்ள வேண்டுமென மகாதீர் அழைப்பு விடுத்திருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜூலை 25ஆம் தேதி, அக்கூட்டத்திற்கு நஜீப்பை அழைக்க பெர்சத்து இளைஞர் பிரிவினர் புத்ரா உலக வாணிக மண்டபத்துக்குச் சென்ற போது, 200 பேரடங்கிய அம்னோ இளைஞர்கள் அவர்களைத் தடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  பெர்சத்துவின் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் அஷ்ராப் முஸ்தாக்கிம், தாம் மேற்கண்ட சம்பவத்தில் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

2015 ஜூன் 5இல், இதே போன்றதொரு கூட்டம் புத்ரா உலக வாணிக மண்டபத்தில் நடந்தது. அதில் உரையாற்றிக் கொண்டிருந்த டாக்டர் மகாதீரைத் தடுத்த போலீஸ்காரர்கள், அக்கூட்டத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.