அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மலேசிய முன்னேற்றக் கட்சி : நிறைவுக் கட்டத்தில் பதிவு நடவடிக்கை -அமைச்சர் வேதமூர்த்தி
அரசியல்முதன்மைச் செய்திகள்

மலேசிய முன்னேற்றக் கட்சி : நிறைவுக் கட்டத்தில் பதிவு நடவடிக்கை -அமைச்சர் வேதமூர்த்தி

புத்ராஜெயா, ஜன. 8
மலேசிய இந்திய சமுதாயத்தின் புதிய விடியலுக்கான விடிவெள்ளி-யைப் போன்று தோற்றம் கண்டுள்ள மலேசிய முன்னேற்றக் கட்சிக்கான பதிவு நடவடிக்கை, நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. அதேவேளை, உறுப்பினர் பதிவு நடவடிக்கையை கட்சி மும்முரமாக மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மலேசிய முன்னேற்றக் கட்சியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவம், கட்சியின் இடைக்கால நிருவாகக் குழு சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சங்கப் பதிவு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு, தற்பொழுது ஒப்புதல் கிடைக்கும் தறுவாயில் உள்ளது.

பன்முகத் தன்மை கொண்ட மலேசியக் கூட்டு சமுதாயத்தை உருவாக்குவதில் நம் முன்னோர் கொண்டிருந்த பரந்த சிந்தனைக்கும் இன்றைய காலக்கட்டத்திற்கும் ஏற்ற உள்ளடக்கம், சமத்துவம், தகுதி, அசல் தன்மை, ஒருங்கிணைப்பு, வெளிப்படைத் தன்மை உள்ளிட்டக் கூறுகளை எம்.ஏ.பி. கட்சி பிரச்சாரம் செய்துவரும் அதேவேளை, தீபகற்ப மலேசியாவில் பல்வேறு அரசியல்-சமூக இயக்கங்களை சார்ந்துள்ளஇளைஞர்களைப் பேரளவில் கவர்ந்து வருகிறது என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக மலர்ந்துள்ள நம்பிக்கைக் கூட்டணி அரசுடன் ஒன்றிணைந்து நம் சமுதாயத்தைத் தற்காக்கவும் சமூக-பொருளாதார அளவில் மேம்படுத்தவும் எம்.ஏ.பி. உறுதி கொண்டுள்ள அதேவேளை, மக்களிடையே ஒற்றுமை, ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும் முனைப்பு காட்டி வருகிறது.

அதேவேளை, மலேசிய முன்னேற்றக் கட்சியின் தற்போதைய இலக்கு, வெறுமனே உறுப்பினர் எண்ணிக்கையை பெருக்குவது மட்டுமல்ல; தேசிய வளர்ச்சிக்கு ஏற்ப சிறுபான்மை சமுதாயத்தினரும் உயர்வடைய வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் களப்பணி ஆற்றும் கடமை வீரர்களை அடையாளம் காண்பதும் அவர்களைக் களம் இறக்குவதும்-தான் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன