வியாழக்கிழமை, ஜூன் 27, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுத்தது தற்காலிகமே! டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுத்தது தற்காலிகமே! டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், ஜன.10-

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) இழந்து விட்டது என சில தரப்பினர் கூறி வரும் கருத்து தவறானது என அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

தேசிய முன்னணிக்கு வெற்றி என்பது இக்கால கட்டத்தில் மிக அவசியமானதாகும். இதை கருத்தில் கொண்டு கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை மஇகா தற்காலிகமாக விட்டுக் கொடுத்து உள்ளது என அவர் கூறினார்.

தற்போது கேமரன் மலை இடைத்தேர்தலில் அப்பகுதியைச் சேர்ந்த பூர்வ குடி மக்கள் பிரிவைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்த படுகின்றார். அவர் வேட்பாளராக நிறுத்தப் படும் பட்சத்தில் தேசிய முன்னணி வெற்றி பெறமுடியும் என்பது நமது வியூகமாக இருக்கின்றது. அதை கருத்தில் கொண்டு பொதுநல அரசியலுக்காக இந்த நாடாளுமன்றத் தொகுதியை இடைக் காலத்திற்கு நாம் விட்டுக் கொடுத்து உள்ளோம் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் முதன்மை கட்சியான அம்னோ கேமரன் மலை தொகுதியை மஇகாவிடமிருந்து எடுத்துக் கொண்டது என்று கூறுவது துளியளவும் உண்மையில்லை என அவர் தெரிவித்தார். மஇகா இந்த தொகுதியை தற்காலிகமாக விட்டுக் கொடுத்துள்ளது என தேசிய முன்னணியின் தலைவர் முகமட் ஹாசன் செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து பலமுறை கூறியதையும் நாம் பார்க்க முடிகிறது.

இது கட்சியின் நலன் கருதி எடுக்கப்பட்ட மிக முக்கிய முடிவாக கருதப்படுகின்றது. குறிப்பாக மத்திய செயலவை இந்த தொகுதி குறித்த முடிவு எழுந்தபோது அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து கைகளை உயர்த்தினார்கள். கேமரன் மலையின் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் வெற்றி பெற முடியுமா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வுக்குப் பின்னரே தொகுதியை பூர்வகுடி வேட்பாளரிடம் கொடுப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

இது எங்கள் தொகுதி! யாருக்கும் இதை விட்டுக் கொடுக்க மாட்டோம்! என்ற இறுமாப்புடன் இருக்க வேண்டிய காலகட்டம் இதுவல்ல. இப்போது எந்த முடிவாக இருந்தாலும் அது தேசிய முன்னணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றால் அதைத் தான் செயல்படுத்த வேண்டுமென கூறினார்.

இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி பெற நமது கட்சி கடுமையாக உழைக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடத்தில் கூறினார்.

மே மாதம் நடந்த 14வது தேசிய பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் மலேசிய இந்திய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சிவராஜ் சந்திரன்.

ஆனால் அங்கு உள்ள வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடந்ததை காரணம் காட்டி தேர்தல் நீதிமன்றம் தேர்தல் செல்லாது என அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில் தொகுதியில் இடைத்தேர்தல் நிலவும் நிலையில் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் கடந்த முறை போட்டியிட்ட வழக்கறிஞர் மனோகரன் இம்முறையும் போட்டியிடுகின்றார்.

சிவராஜ் சந்திரன் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது உட்பட ஐந்து ஆண்டுகளுக்கு வாக்களிக்கும் தகுதியையும் அவர் இழந்துள்ளார் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கின்றது. இதனிடையே அத்தொகுதியில் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தொகுதியை தேசிய முன்னணிக்கு தற்காலிகமாக விட்டுக் கொடுத்துள்ளது. தொகுதியின் வேட்பாளராக பூர்வ குடியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ரம்லி முகமட் நோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன