செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தைப்பூசத் திருவிழா -டான்ஸ்ரீ நடராஜா
சமூகம்முதன்மைச் செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தைப்பூசத் திருவிழா -டான்ஸ்ரீ நடராஜா

கோலாலம்பூர், ஜன 11
தைப்பூசத்திற்கு பத்துமலைத் திருத்தலத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவஸ்தானம் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை முக்கிய கடமையாகக் கொண்டுள்ளது. எனவே, பலத்த பாதுகாப்புடன் தைப்பூச திருவிழா கொண்டாடப்படும் என ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.

தைப்பூசத்தை முன்னிட்டு வெள்ளி ரதம் ஜனவரி 19ஆம் தேதி சனிக்கிழமையன்று விசேஷ பூஜைக்குப் பின்னர் இரவு 10.00 மணியளவில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஜனவரி 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பத்துமலை திருத்தலத்தை வந்தடையும்.அவர் கூறினார்.

தைப்பூசத்திற்கு மறுநாள் பிப்ரவரி 22ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 4.00 மணிக்கு பத்துமலைத் திருத்தலத்திலிருந்து ரதம் புறப்பட்டு மறுநாள் புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை அது சென்றடையும் என அவர் சொன்னார்.

இந்த ரத ஊர்வலத்தின் போது தலைநகரில் பல முக்கிய சாலைகள் மூடப்படும் என்பதால் பொது மக்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று பத்துமலை திருத்தலத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இதனிடையே, இம்முறை சுமார் 1531 போலீசார் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கோம்பாக் மாவட்ட ஓசிபிடி சம்ஷோர் மன்சோர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஜனவரி 18ஆம் தேதி தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அதற்கான வேலைகளை தயார்படுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.

ரத ஊர்வலத்தின் போதும் தைப்பூசத் திருவிழாவின் போதும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஜாலான் துன் எஸ்.எஸ்.லீ, ஜாலான் சுல்தான், ஜாலான் புடு (புலாத்தான்), ஜாலான் புடு/ஜாலான் துன் பேராக், லெபோ அம்பாங், ஜாலான் டாங் வாங்கி, ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் ஈப்போ, ஜாலான் துன் இஸ்மாயில், ஜாலான் அம்பாங், ஜாலான் முன்சி அப்துல்லா, ஆகிய சாலை வழியாக ரதம் பத்துமலையை நோக்கிச் செல்லும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன