மலேசிய தல அஜித் ரசிகர் நற்பணி மன்றத்தின் விஸ்வாசம் திரைப்பட கொண்டாட்டம்

ஷாஆலம், ஜன.  14-

தல அஜித் குமாரின் அனல்பறக்கும் நடிப்பில் வெளிவந்துள்ள விஸ்வாசம் திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடியது மலேசிய தல அஜித் ரசிகர் நற்பணி மன்றம்.

கட்டுக்கடங்காத காளையாக பட்டையை கிளப்பி இருக்கும் நடிகர் அஜித்குமாரின் வெற்றி படங்களின் வரிசையில் விஸ்வாசம், குடும்பத்துடன் பார்க்கவேண்டிய கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது, இயக்குநர் சிவாவின் உருவாக்கத்தில் அஜித் நடித்த 4ஆவது திரைப்படம் விஸ்வாசம்.

டி.இமான் இசை இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. மனைவி, பிள்ளை, பாசம் என்று அஜித்குமாரின் மறுபக்கத்தை இத்திரைப்படம் பிரதிபலித்துள்ளது எனக் கூறலாம் என்று மலேசிய தல அஜித் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் கூறினார்.

மலேசியாவில் இத்திரைப்படத்தை டிஎம்ஓய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்தை திரையிட டிஎஸ்ஆர் திரையரங்கில் இரவு 9.30 காட்சியை திரையிட ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்தது. இக்காட்சியின் டிக்கெட் விற்பனையிலிருந்து ஒரு பகுதியைக் கொண்டு தமிழ்ப்பள்ளிக்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கும் திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் செயல்பட்டு வரும் அஜித் ரசிகர் நற்பணி மன்றம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றது. இளைஞர்களை நல்வழி படுத்துவதோடு தமிழ்ப்பள்ளிக்கும் உதவிகளை வழங்கி வருகிறது. திரைப்பட கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் சேவை அடிப்படையில் இம்மன்றம் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 10ஆம் தேதி டி.எஸ்.ஆர் திரையரங்கில் தல அஜித் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மன்றத்தின் இந்த முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கிய செராஸ் அழகேந்திரா டி.எஸ்.ஆர். திரையரங்க உரிமையாளர், டத்தோ மாலிக் யூசோப், ஸ்ரீ ராசி பட்டு மாளிகை, முஸ்தபா கான் ரெய்மாண்ட், யுவராஜன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தேவேந்திரன் குறிப்பிட்டார்.