திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > உலக அரங்கில் சாதனை படைக்கிறது பேட்ட! மலேசியாவில் கபாலி வசூலை மிஞ்சியது
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

உலக அரங்கில் சாதனை படைக்கிறது பேட்ட! மலேசியாவில் கபாலி வசூலை மிஞ்சியது

கோலாலம்பூர் ஜன 14-

மலேசியாவின் முதன்மை திரைப்பட வெளியீட்டு நிறுவனமான மாலிக் ஸ்ட்ரிம் காப்பிரேஷன் நிறுவனத்தின் வெளியீட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியீடு கண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் உலக அரங்கில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகின்றது.

மலேசியாவைப் பொறுத்தவரை கபாலி திரைப்படத்திற்கு பிறகு இத்திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்திருக்கின்றது. குறிப்பாக கபாலியின் வசூலையும் இது கடந்துள்ளது என அந்நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ மாலிக் தெரிவித்தார்.

இந்தியாவை தவிர்த்து உலக அரங்கில் இத் திரைப்படத்தை வெளியிடும் உரிமையை மாலிக் ஸ்ட்ரிம் நிறுவனம் பெற்றது. முன்னதாக இதன் வெற்றி விழா சனிக்கிழமை செராஸில் உள்ள திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது.

இதில் மலேசிய கலைத் துறையில் குறிப்பாக மலாய் கலைத் துறையின் முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டு பேட்ட திரைப்படத்தை கண்டு ரசித்தனர். அதோடு இத்திரைப்படம் தங்களையும் கவர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்கள்.

மாலிக் ஸ்ட்ரிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தை வெளியிட்டது. அதன் பிறகு பா.ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடப்பதற்கு பெருமளவில் உதவி புரிந்ததோடு அப்படத்தை மலேசியாவில் மாலிக் நிறுவனம் வெளியிட்டது.

அத்திரைப்படம் மலேசியாவில் மிகப்பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தியது. இப்போது இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பேட்ட திரைப்படம் கபாலியின் வசூலையும் தாண்டி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் காட்சிகள் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. பின்னணி இசையும் மக்களை வெகுவாக கவர்ந்து இருப்பதால் இத்திரைப்படம் அனைத்து தர ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி ஆகிய திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இந்த பேட்ட திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். தமது கடந்த படங்களில் சந்தோஷ் நாராயணன் உடன் பணியாற்றிய கார்த்திக் சுப்புராஜ் இந்தமுறை அனிருத்துடன் கைகோர்த்திருக்கிறார்.

அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் மரண மாஸ் பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, சசிகுமார் போன்ற பல முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தாலும் ரஜினிகாந்தின் மிகச்சிறந்த மாறுபட்ட நடிப்பு பழைய ரஜினியை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் சமூக தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதோடு இத்திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள் தங்களின் மன ஓட்டங்களையும் பதிந்து வருகிறார்கள். இதனால் இத்திரைப்படம் மேலும் பல சாதனைகளை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை ஊடகவியலாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன