திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கறுப்பர் ஆலயத் தேர்தல்: சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கறுப்பர் ஆலயத் தேர்தல்: சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம்

செராஸ், ஜன. 14-

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் செயல்பட்டுவந்த செராஸ் ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கறுப்பர் ஆலயத்தில் நிர்வாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. சுற்று வட்டார பொதுமக்கள் வாக்களித்து நிர்வாகத்தை தேர்வு செய்யட்டும் என்று ஆலயத்தின் முன்னால் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

கடந்த ஓர் ஆண்டாக நடப்பு நிர்வாகத்தின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக முன்னாள் நிர்வாகத்தினரும் சுற்றுவட்டார மக்களில் சிலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததோடு காவல்நிலையத்தில் கிட்டத்தட்ட 50 புகார்களையும் செய்துள்ளனர். அண்மையில் அங்கு உள்ள 500 குடும்பத்தினர் நிர்வாகத்தினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

இவ்வாலயத்தின் நிர்வாக பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் அனுமதியுடன் ஆலயத்தில் நிர்வாகத் தேர்தல் நடைபெற உள்ளது என்று ஆலயத்தின் முன்னாள் நிர்வாகத்தைச் சேர்ந்த பூவன் கூறினார்.

வரும் ஜனவரி 27ஆம் தேதி இரவு 7 மணி தொடங்கி ஆலயத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர் உட்பட ஏழு பதவிகளுக்கு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று பின்னர் தேர்தல் நடைபெறும். பொதுமக்களின் முயற்சியில் உருவான ஆலயம் என்பதால் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். தேர்தல் நடைபெறும் தேதியிலும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை சமர்ப்பிக்கலாம். ஆனால் போட்டியிடுபவர்கள் அந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

குறிப்பாக மலேசிய இந்து சங்கம் இத்தேர்தலை வழிநடத்தும். ஆலயம் அமைந்திருக்கும் இடமான டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் எட்ரி பைசால் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற உள்ளது. பாதுகாப்புப் பணிக்காக காவல்துறையினரும் பணியில் அமர்த்தப்படுவர். தேர்தல் நடத்தி அதன் வழி நிர்வாகத்தை தேர்வு செய்யும் முறைக்கு ஆதரவு கொடுப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் கடிதம் வழங்கியிருப்பதாகவும் பூவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்தல் விதிமுறையின்படி நிர்வாகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயம் அமைந்திருக்கும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம். பிரச்னைகளை எதிர்நோக்கும் மற்ற ஆலயங்களுக்கு இத்தேர்தல் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன