திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஒற்றுமையில் வளம் பெறுவோம்! மஇகா தேசியத் தலைவரின் பொங்கல் வாழ்த்துச் செய்தி
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஒற்றுமையில் வளம் பெறுவோம்! மஇகா தேசியத் தலைவரின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், எனது அன்பிற்குரிய மலேசிய வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகாவின் தேசியத் தலைவருமான மாண்புமிகு செனட்டர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

உழவர் பெருமக்கள், இயற்கையின் அருளினாலும், கடின உழைப்பினாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபட்டு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாள் ஆகும்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி” எனத் தொடங்கும் குறட்பாவில் வள்ளுவப் பெருந்தகை உழவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள் என்று உழவுத் தொழிலின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றுகிறார். அவ்வழித் தோன்றலாகிய நாம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடும் இப்பண்டிகையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதுபோல் நம்மில் உள்ள பழைய சிந்தனைகளுக்கு தீமூட்டி புது சிந்தனைகளை வரவேற்று ஆக்கப்பூர்வமான வாழ்வினை மேற்கொள்வோம். புதிய சிந்தனைகளோடும் புதிய முயற்சிகளோடும் பிறந்துள்ள புத்தாண்டில் நம்பிக்கையோடு அனைவரது வாழ்விலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி, ஆனந்தம் தங்கிட இப்பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்வோம்.

அதேபோல் தமிழர்களாகிய நம் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவி நலமும், வளமும் பெருகிட ‘‘தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் முன்னோர் கூற்றுப்படி பிறக்கும் இத்தைமாதம் தமிழர் வாழ்வில் ஏற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கையுடன் இயற்கையை வழிபடுவோம் வாரீர் என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன