ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மனோகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாமா? டத்தோ சிவராஜ் புகார்
அரசியல்குற்றவியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

மனோகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாமா? டத்தோ சிவராஜ் புகார்

புத்ராஜெயா, ஜன. 15-

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு அங்கு போட்டியிடும் ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) வேட்பாளர் வழக்கறிஞர் மனோகரன் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக வந்த செய்தியை மலேசிய லஞ்ச தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டுமென டத்தோ சிவராஜ் வலியுறுத்தினார். அது தொடர்பில் மலேசிய இலஞ்ச தடுப்பு ஆணையத்திலும் அவர் புகார் செய்துள்ளார்.

முன்னதாக 14ஆவது பொதுத்தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு சிவராஜ் சந்திரன் வெற்றி பெற்றார். ஆனால் அவர் அங்குள்ள வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வழக்கறிஞர் மனோகரன் தேர்தல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணையின் முடிவில் கேமரன்மலை தேர்தல் செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்ததோடு மறு தேர்தல் நடத்த வேண்டுமென உத்தரவிட்டது.

லஞ்ச தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்த பிறகு சிவராஜ் செய்தியாளர்களை சந்தித்தபோது

சிவராஜ் சந்திரன் நேரடியாக யாருக்கும் பணத்தை வழங்கவில்லை என்றாலும் அத்தொகுதியில் பணபட்டுவாடா நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை காரணம் காட்டி தேர்தல் செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அறிவித்தது.

அதோடு தேர்தலில் குற்றம் புரிந்ததற்காக சிவராஜ் சந்திரன் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என அறிவித்த தேர்தல் ஆணையம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாக்களிக்கும் தகுதியையும் அவர் இழந்து உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியது.

இச்சூழ்நிலையில் இம்மாதம் 27ஆம் தேதி கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகின்றது. அதில் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் மனோகரன் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலை முன்னிட்டு இப்போது அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

நேற்று முன் தினம் வழக்கறிஞர் மனோகரன் சார்பில் அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் அதோடு அந்த நிழல் படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதற்கு பதிலளித்த ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அது போக்குவரத்துக்காக வழங்கப்பட்ட பெட்ரோல் உதவித்தொகை என கூறினார்.

தமது வழக்கு விசாரணையில் இருந்தபோது வாக்காளர்களுக்கு பெட்ரோல் உதவித்தொகை வழங்குவது சட்டவிரோதமானது என தேர்தல் நீதிமன்றம் கூறியதாக சிவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதனால் மனோகரனின் சார்பில் இந்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டிருப்பது சட்டப்படி குற்றமாகும். இதனை மலேசிய லஞ்சத்தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் என புகார் தெரிவித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் புகார் மனுவை சமர்ப்பித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார். லஞ்ச தடுப்பு ஆணையம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவர்கள் முறையான விசாரணையை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன