புக்கிட் அமான், ஜன.16-

சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள சீபீல்ட் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் முன்புறம் நடந்த கலவரத்தில்  காலமான தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணம்  தொடர்பிலான விசாரணையை போலீசார் தாமதப்படுத்தி
வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை, தேசிய போலீஸ் படைத் தலைவர்  டான் ஶ்ரீ ஃபுசி ஹரூண் மறுத்திருக்கின்றார்.

முகமட் அடிப்பின் மரணம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதேவேளையில் தமது தரப்பு  சட்டப்படி செயல்பட  வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முகமட் அடிப் தொடர்பான விசாரணை இம்மாதம் 18-ஆம் தேதி தொடங்கப்பட விருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஃபுசி ஹரூண் குறிப்பிட்டார்.

“எங்களின் விசாரணை அறிக்கை முடியும் தருவாயில் இருக்கிறது. வழக்கு விசாரணைக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தேசிய சட்டத்துறைத் தலைவர் இல்காகாவினால் எங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கு விசாரணை ஜனவரி 18-ஆம் தேதி நடைபெற விருக்கின்றது. அதனால், இதில் விவகாரம் ஏதும் இல்லை என்று நான் கருதுகின்றேன். நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு (குற்றஞ்சாட்டுபவர்கள்) தொழில்நுட்ப ரீதியில் புரியாமல் இருக்கலாம். “என டான் ஶ்ரீ முஹமட் ஃபுசி ஹரூண் கூறினார்.

கோலாலம்பூரில், புதன்கிழமை நடந்த புக்கிட் அமான் அளவிலான அனைத்து போலீஸ் பிரிவுகளின் மாதாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது MOHAMAD FUZI இதனைத் தெரிவித்தார்.

இதேநிகழ்ச்சியில் பேசிய டான் ஶ்ரீ ஃபுசி ஹரூண் , சவாவில், கோத்தாகினபாலுவில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவன், ஒரு சட்டவிரோதக் குடியேறி என்று சதேகிக்கப்படுவதாக கூறுகிறார். கோத்தாகினபாலு,  தாமன் தெலிபோல் ரியாவில் உள்ள சொகுசு அடுக்குமாடி வீட்டில், அந்த ஆடவன், இரண்டு வயது சிறுமியைப் பினைபிடித்து வைத்திருந்தான்.

அச்சிறுமியை மீட்கும் நடவடிக்கையின்போது அந்த ஆடவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடன் எந்த ஒரு பத்திரமும் இல்லாததினால், அவனின் அடையாளம் தெரியவில்லை என்று,  ஃபுசி ஹரூண் தெரிவித்தார்.